

ஸ்வீடன் நாட்டில் பிறந்து வளர்ந்தவர் நடிகை எல்லி அவ்ரம். இந்தியில் சில படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் தனுஷ் நடித்த ‘நானே வருவேன்’ படத்தில் நடித்துள்ளார். பாலிவுட்டில் நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் இளம் வயதிலேயே இந்தியா வந்த அவர், தனது முடிவுக்காகப் பெருமைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “நான் சந்தித்த போராட்டங்கள் அனைத்தும் உண்மை யிலேயே மதிப்புமிக்கவை. இளம் வயதில் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று துணிச்சலான முடிவு எடுத்ததற்காக பெருமைப்படுகிறேன்.
அந்த ஒரு முடிவு என் வாழ்க்கையை மாற்றியது. இந்தியா எனக்கு வாழ்க்கையை பல கோணங்களில் பார்க்கக் கற்றுக் கொடுத்தது. மனிதர்கள், கலாச்சாரம், உறவுகள், சவால்கள் என வாழ்க்கையின் பல பரிமாணங்களை புரிந்துகொண்டேன்.
இந்தியாவில் வாழ்ந்ததன் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். அதற்காக ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த இயக்குநர்களுக்கு நன்றி. அதேபோல் என்னை ஏற்றுக்கொண்டு, ஆதரித்து வரும் இந்திய ரசிகர்களுக்கும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன் ” என்று கூறியுள்ளார்.