புகழஞ்சலி | “சரத்பாபுவுடன் இணைந்து நடித்த நாட்கள் மனதில் நிழலாடுகின்றன” - கமல்ஹாசன்

புகழஞ்சலி | “சரத்பாபுவுடன் இணைந்து நடித்த நாட்கள் மனதில் நிழலாடுகின்றன” - கமல்ஹாசன்
Updated on
1 min read

“சரத்பாபுவுடன் இணைந்து நடித்த நாட்கள் மனதில் நிழலாடுகின்றன” என நடிகர் கமல்ஹாசன் சரத்பாபு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள இரங்கலில், “சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது.அவருக்கு என் அஞ்சலி” என பதிவிட்டுள்ளார்.

நடிகர் சரத்பாபு தமிழில், ‘நிழல் நிஜமாகிறது’, 'உதிரிப்பூக்கள்', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'முள்ளும் மலரும்', 'அண்ணாமலை', ‘முத்து’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சரத்பாபுவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஹைதராபாத் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையிலிருந்த நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை இன்று மோசமடைந்த நிலையில் அவர் உயிரிழந்தார். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சரத்பாபு திரைப் பயணம்: 1973-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ராம ராஜ்ஜியம்’ படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானார் சரத்பாபு. ‘பட்டினப்பிரவேசம்’ படம் மூலமாக தமிழில் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர், பின்னாட்களில் தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்தார். 1979-ல் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படம் அவருக்கு ரசிகர்களிடையே தனி அடையாளத்தை பெற்றுதந்தது. தவிர, ‘சரபஞ்சரம்’, ‘தன்யா’ உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார். இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான ‘வசந்த முல்லை’ படத்தில் சரத்பாபு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in