

ட்விட்டர் சமூக வலைதளத்தில் இருந்து தற்காலிக ஓய்வு எடுத்துக் கொள்வதாக நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மடோன் அஸ்வின் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இது தவிர ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.
ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் சிவகார்த்திகேயன் ஆக்டிவாக இயங்கி வருகிறார். தனது படங்கள் குறித்த அறிவிப்புகள் மட்டுமின்றி பிற படங்களின் டீசர்கள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களையும் சிவகார்த்திகேயன் வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் ட்விட்டர் சமூக வலைதளத்தில் இருந்து தற்காலிக ஓய்வு எடுத்துக் கொள்வதாக நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், "அன்பு சகோதர சகோதரிகளே, ட்விட்டரிலிருந்து சில நாட்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்கிறேன். விரைவில் திரும்பவும் வருவேன். திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகள் என்னுடைய குழுவினர் மூலம் வெளியிடப்படும்" என்று கூறியுள்ளார்.
My dear brothers and sisters,
I am taking a break from twitter for a while.
Take care, and i will be back soon