‘பொன்னியின் செல்வன் வெற்றிக்கு கல்கி ரசிகர்கள்தான் காரணம்’ - கார்த்தி

கார்த்தி | கோப்புப்படம்
கார்த்தி | கோப்புப்படம்
Updated on
1 min read

எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை 2 பாகங்களாக, திரைப்படமாக்கி இருக்கிறார் மணிரத்னம். முதல் பாகம் கடந்த ஆண்டு செப்.30ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அடுத்த பாகம் வரும் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. நடிகர் கார்த்தி கூறியதாவது.

வந்தியதேவன் கேரக்டரில் நடிக்க, கமல் சாரில் இருந்து பெரும்பாலான நடிகர்கள் விரும்பி இருந்தார்கள். ஆனால், அது எனக்கு கிடைத்தது. அதை எப்படி சிறப்பாகச் செய்ய முடியும் என்றுதான் பார்த்தேன். படம் ரிலீஸ் ஆன பிறகு வந்தியதேவனாக வேறு ஒருவரை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று பலர் சொன்னார்கள். மகிழ்ச்சியாக இருந்தது. இதுவரை தமிழ் சினிமா வெளியாகாத பல்வேறு இடங்களில் ‘பொன்னியின் செல்வன்’ ரிலீஸ் ஆனது. இந்தப் படம் வெற்றிபெற்றதற்கு எழுத்தாளர் கல்கியின் ரசிகர்கள்தான் காரணம். குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கும் அனுபவத்தை இந்தப் படம் கொடுத்தது.

அடுத்தப் பாகத்தில் ஆதித்த கரிகாலன் வெடிக்கப் போவதைப் பார்க்க போறோம், நந்தினி யார் என்பதை தெரிந்துகொள்ளப் போகிறோம். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில்தான் கதை நடக்க இருக்கிறது. அதனால், இந்தப் படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன். இவ்வாறு நடிகர் கார்த்தி கூறினார்.

இயக்குநர் மணிரத்னம் கூறும்போது, “இரண்டாம் பாகத்தின் தொடக்கத்திலும் கமல்ஹாசன் பேசியிருக்கிறார். இளையராஜாவை மிஸ் பண்ணுகிறேனா? என்று கேட்கிறார்கள். அவர் ஜீனியஸ். எந்தப் படம் பண்ணினாலும் அந்த உணர்வு இருக்கத்தான் செய்யும். நான் வளர்ந்தது அவர் இசையை கேட்டுதான். அவரை மிஸ் பண்ணாமல் இருக்க முடியாது. ‘பொன்னியின் செல்வன்’ படம் மாதிரி, அடுத்தும் ஏதாவது கனவு படம் பண்ணும் ஆசை இருக்கிறதா? என்று கேட்கிறார்கள். இருக்கிறது. எனக்கு விருதுகள் பற்றி கவலையில்லை. இரண்டாம் பாகத்தில் விடைதெரியாத கேள்விகள் இருக்கும். வாழ்க்கை எல்லாவற்றுக்கும் பதில் சொல்வதில்லை” என்றார்.

ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு,சோபிதா துலிபாலா ஆகியோர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in