மீண்டும் உயிர்பெற்ற முத்தையா முரளிதரனின் பயோபிக் - முதல் தோற்றம் வெளியீடு

மீண்டும் உயிர்பெற்ற முத்தையா முரளிதரனின் பயோபிக் - முதல் தோற்றம் வெளியீடு
Updated on
1 min read

பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் ‘800’ படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது. முன்னதாக, விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்க இருந்து பின்னர் விமர்சனங்களால் படத்திலிருந்து அவர் விலகியது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படமொன்று உருவாகவுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இப்படத்துக்கான பணிகள் தள்ளிக்கொண்டே போனது.

‘800’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் முதலில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன. ஆனால், சமூக வலைதளங்களில் எழுந்த தொடர் எதிர்ப்பலை காரணமாக, அப்படத்திலிருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார். அதன்பிறகு இப்படம் குறித்த தகவல்கள் எதையும் வெளியிடாமல் படக்குழு அமைதி காத்து வந்தது.

இந்நிலையில், தற்போது படத்தின் முதல் தொற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘800’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப் புகழ் நடிகர் மதுர் மிட்டல் முத்தையா முரளிதரனாகவும், மஹிமா நம்பியார் மதிமலராகவும் நடிக்கின்றனர். இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் அசோசியேட் இயக்குநராக இருந்தவரும், ‘கனிமொழி’ (2010) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவருமான ஸ்ரீபதி இப்படத்தை இயக்குகிறார்.

மூவி டிரெயின் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இலங்கை, சென்னை, கொச்சி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டு இதன் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in