தென்னிந்தியத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்கள், டப்பிங் கலைஞர்கள் சங்கத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: ஆவணங்களை எடுத்துக் கொள்ளும் வகையில் தென்னிந்தியத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கு வைக்கப்பட்ட 'சீலை' வரும் ஏப்.17ம் தேதி வரை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கான கட்டடம் கடந்த 2011-2012ம் ஆண்டில் கட்டப்பட்டது. சென்னை மாநகராட்சியிடம் பெற்ற திட்ட அனுமதியை மீறி, கட்டடம் கட்டப்பட்டதாக சங்க உறுப்பினர் ஒருவர் அளித்த புகாரையடுத்து, அந்த கட்டடத்திற்கு 'சீல்' வைக்கப்பட்டது.

இந்நிலையில், சங்க கட்டடத்திற்குள் உள்ள ஆவணங்கள், மேஜை உள்ளிட்ட பொருட்களை எடுப்பதற்காக சங்க கட்டடத்திற்கு வைக்கப்பட்ட 'சீலை' அகற்ற உத்தரவிடக் கோரி தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க பொதுச் செயலாளர் கதிரவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வேலுமணி, லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, ஏப்ரல் 17ம் தேதி வரை தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க கட்டடத்திற்கு வைக்கப்பட்ட 'சீலை' அகற்ற உத்தரவிட்டனர். அக்கட்டடத்திற்கு ஏப்ரல் 18ம் தேதி மீண்டும் 'சீல்' வைக்க சென்னை மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in