

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அக நக’ பாடல் வரும் மார்ச் 20-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவானது. இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.500 கோடியை வசூலித்து சாதனை படைத்தது. இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 அன்று வெளியாகிறது. கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், படத்தின் முதல் பாடலான ‘அக நக’ பாடல் வரும் மார்ச் 20-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். சக்திஸ்ரீ கோபாலன் பாடலை பாடியிருக்கிறார். கார்த்தி கண்கள் கட்டப்பட்ட நிலையில், த்ரிஷா கையில் கத்தியுடன் இருக்கும் வகையிலான போஸ்டர் அறிவிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது.