Published : 25 Jan 2023 05:24 PM
Last Updated : 25 Jan 2023 05:24 PM

கடவுள் விஷயத்தில் ஆண், பெண் பாகுபாடு இல்லை: ஐஸ்வர்யா ராஜேஷ்

இடது: ஐஸ்வர்யா ராஜேஷ்

சென்னை: “கடவுளுக்கு எல்லோருமே ஒன்றுதான். அதில் ஆண், பெண் என்ற வித்தியாசமெல்லாம் இல்லை. என் கோயிலுக்கு இவர்கள் வரக்கூடாது, அவர்கள் வரக்கூடாது என எந்தக் கடவுளும் சொல்லவில்லை” என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.

ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடித்திருந்த படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆணாதிக்கச் சிந்தனையால் பாதிக்கப்படும் ஒரு படித்த பெண்ணின் நிலையை அழுத்தமாக, யதார்த்தமாகக் காட்டியிருந்ததாகப் பாராட்டுகளைப் பெற்றது. இப்படம் அதே பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக்காகியுள்ளது.

இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்கி, தயாரித்து வருகிறார். இதில் நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். சுராஜ் வெஞ்சரமூடு கதாபாத்திரத்தில் ராகுல் ரவீந்திரன் நடித்துள்ளார். படம் தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகி இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “இயக்குநர் கண்ணன் ஒரு படத்தை மறு உருவாக்கம் செய்ய வேண்டும் என்று கேட்கும்போது, முதலில் தயங்கினேன். படம் பாருங்கள் என்று கூறியதும் பார்த்தேன். மறு உருவாக்கம் என்றாலே ஒப்பீடு வரும். அதேபோல், எனக்கும் ஒப்பீடும், குழப்பமும் இருந்தது. 2, 3 நாட்கள் என் அம்மாவை கவனித்தேன். சமையலறைக்கு செல்வார், வேலை பார்ப்பார் திரும்ப வருவார். இதையே தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தார். ஆனால், இத்தனை ஆண்டுகளாக நான் இதை கவனித்ததே இல்லை. அன்று தான் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

மேலும், கிராமத்தில் இருக்கும் பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது. அதற்காகவே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்தப்படம் அனைத்து மக்களிடமும் செல்ல வேண்டும். சின்ன சின்ன கதாப்பாத்திரங்களாக இருந்தாலும் நல்ல கதாபாத்திரமா இருந்தால் நான் நடித்து விடுவேன். சினிமாவும், கதாபாத்திரமும்தான் என் கடவுள். இந்த கதாபாத்திரமும் எனது மனத்துக்கு நெருக்கமான கதாபாத்திரம்.மலையாளத்தில் நிமிஷாவின் நடிப்பை 50 சதவிகிதம் நடித்திருந்தாலே நான் சந்தோஷப்படுவேன்” என்றார்.

தொடர்ந்து, “மலையாள படத்தில் சபரிமலை விவகாரத்தில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதற்கு ஆதரவாக பேசியிருப்பார்கள். தமிழில் அதனை எப்படி கையாண்டிருக்கிறீர்கள்?” என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், “படத்தை பார்த்தால் உங்களுக்கே புரியும். கடவுளுக்கு எல்லோருமே ஒன்று தான். அதில் ஆண், பெண் என்ற வித்தியாசமெல்லாம் இல்லை. என் கோயிலுக்கு இவர்கள் வரக்கூடாது, அவர்கள் வரக்கூடாது என எந்தக் கடவுளும் சொல்லவில்லை.

இவையெல்லாம் நாமே உருவாக்கின சட்டங்கள் தான். அதையேத்தான் இந்தப் படத்திலும் சொல்லியிருக்கிறோம். இதை சாப்பிடக் கூடாது, இது தீட்டு என எந்தக் கடவுளும் சொன்னதில்லை. இவையெல்லாம் நாமே உருவாக்கின விஷயங்கள். கடவுளுக்கும் இதுக்கும் சம்பந்தமேயில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். கா.பெ.ரணசிங்கம் படத்தில் கூட இதை ப்பற்றி பேசியிருப்பேன். என்னைப் பொறுத்தவரை நான் இதையெல்லாம் நம்புவதேயில்லை” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x