

எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துவந்த 'சரவணன் இருக்க பயமேன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
'மனிதன்' படத்தைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் உருவாகும் 'சரவணன் இருக்க பயமேன்', தளபதி இயக்கத்தில் 'பொதுவாக எம்மனசு தங்கம்' மற்றும் கெளரவ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத ஒரு படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வந்தார் உதயநிதி ஸ்டாலின்.
எழில் இயக்கத்தில் உருவாகி வரும் 'சரவணன் இருக்க பயமேன்' படத்தை தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். ரெஜினா, சூரி, சிருஷ்டி டாங்கே, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் உதயநிதியுடன் நடித்து வருகிறார்.
இமான் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது. இறுதியாக ஒரு பாடலை மட்டும் படமாக்க கேரளாவில் உள்ள கண்ணூர் என்ற இடத்துக்கு சென்றது படக்குழு.
அப்பாடல் படப்பிடிப்புடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவுற்றது. இறுதிக்கட்டப் பணிகளைத் துரிதப்படுத்தி இருக்கும் படக்குழு, ஜனவரியில் இப்படத்தை விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். ஜனவரி இறுதியில் படத்தை வெளியிடவும் முடிவு செய்துள்ளனர்.