‘வாரசுடு’ ரிலீஸ் தேதி மாற்றம் முதல் மிஷ்கினின் ஆதங்கம் வரை: திரைத் துறை தெறிப்புகள் @ ஜன.9, 2023

‘வாரசுடு’ ரிலீஸ் தேதி மாற்றம் முதல் மிஷ்கினின் ஆதங்கம் வரை: திரைத் துறை தெறிப்புகள் @ ஜன.9, 2023
Updated on
4 min read

விஜய்யின் ‘வாரிசு’ தெலுங்கு வெர்ஷன் ரிலீஸ் தேதி மாற்றம்: விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், ‘‘சங்கராந்தி பண்டிகை அன்று வெளியாகும் நமது தெலுங்கு கதாநாயகர்களது படங்களான ‘வீர சிம்ஹா ரெட்டி’, ‘வால்டர் வீரய்யா’ ஆகிய படங்களை முதலில் தியேட்டரில் பாருங்கள்.இதன் காரணமாகதான் நாங்கள் ‘வாரசுடு’ படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளோம். பட வெளியீடு தள்ளிப்போவதால் நிச்சயம் தெலுங்கு வெர்ஷனின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் என்பது பாதிப்படையாது. படத்தின் எமோஷன்கள் நிச்சயம் பார்வையாளர்களுக்கு கனெக்ட் ஆகும். தமிழ்நாட்டில் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் நாங்கள் நம்பிக்கையாக உள்ளோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

சமந்தாவின் ‘சாகுந்தலம்’ ட்ரெய்லர் வெளியீடு: நடிகை சமந்தாவின் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘சாகுந்தலம்’. சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தில்ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் வெளியிடும் இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். இந்தப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை. ஒட்டுமொத்த படத்தையும் 3டி தொழில்நுட்பத்தில் மாற்ற உள்ளதால் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்படுவதாக படக்குழு தெரிவித்திருந்தது. பான் இந்தியா முறையில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

‘கடைசி விவசாயி’ படம் குறித்து மிஷ்கினின் ஆதங்கம்: ‘வெள்ளிமலை’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கின், “எளிமையிலிருந்து நாம் தள்ளிபோய் கொண்டியிருக்கிறோம். எளிமையான மனிதர்களை நாம் பார்க்க வேண்டும். இடையில் வந்த மிகச்சிறந்த படமான ‘கடைசி விவசாயி’ படத்தை நாம் பார்க்கவேயில்லை. அந்தப் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதை காணத் தவறிய நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும். உலகத்திலேயே மிகச் சிறந்த படம் என்று ‘கடைசி விவசாயி’ படத்தை கூறுகின்றனர். படத்தின் இயக்குநர் மணிகண்டன் காட்டுக்குள் இருந்து அந்த வெயிலை பருகி படத்தை இயக்கியிருந்தார். மிகச் சிறந்த நடிகர் படத்தில் நடித்திருந்தார். அதை நாம் யாருமே பார்க்கவில்லை.

அந்தப் படத்தை நாம் மிகப்பெரிய வெற்றிப்படமாக்கத் தவறிவிட்டோம். படக்குழுவினர் போட்ட காசை எடுத்துவிட்டார்கள். இருந்தாலும் நாம் அதை வெற்றிப் படமாக்கவில்லை என்பது எனக்கு மிகப்பெரிய வருத்தம். ரூ.500 கோடி, ரூ.400 கோடி எனும் ஓடும் படங்களின் நடுவே இந்தப் படத்திற்கு நாம் ரூ.30 கோடி கூட கொடுக்கவில்லை. ஒரு நல்ல படைப்பாளி நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறான். அந்தப் படைப்பாளி தன் உதிரத்திலிருந்து படைப்பை உருவாக்குகிறான். அவன் நினைத்தால் பெரிய நடிகருக்கு கதை சொல்லி கோடிகளில் சம்பாதிக்க முடியும். ஆனால் மணிகண்டன் அப்படியானவர் அல்ல. சினிமாவை நேசிப்பவர். அவருக்கு சர்வதேச அங்கீகாரம் இன்று கிடைத்துள்ளது. நாம் அவரது படைப்பை கொண்டாடவில்லை” என்றார்.

ஷாருக்கானின் ‘பதான்’ ட்ரெய்லர் எப்போது?: கிட்டதட்ட 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் ஷாருக்கானின் ‘பதான்’ படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆதித்யா சோப்ரா இயக்கியுள்ள இப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் 50-வது படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், நாளை (ஜனவரி 10) காலை 11 மணி அளவில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகை சமந்தா உருக்கம்: நடிகை சமந்தா நடிக்கும் ‘சாகுந்தலம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகை சமந்தா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "வாழ்க்கையில் நான் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்திருக்கிறேன். நான் சினிமாவை எவ்வளவு நேசிக்கிறேன், சினிமா என்னை எந்த அளவுக்கு நேசிக்கிறது என்பது மட்டும் என் வாழ்க்கையில் எந்த மாற்றமுமின்றி நிலையாக உள்ளது. ‘சாகுந்தலம்’ படத்தின் மூலம் எனக்கும் சினிமாவுக்குமான காதல் இன்னும் வளரும் என நினைக்கிறேன்.

அண்மையில் படத்தைப் பார்த்தேன். அது எனது எதிர்பார்ப்பையும், இயக்குநர் கொடுத்த வாக்குறுதியையும் கடந்து ஈர்த்தது. படம் பார்த்துவிட்டு இயக்குநருக்கு நன்றி சொன்னேன். இந்தப் படம் பார்த்த எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை பார்வையாளர்களும் அனுபவிப்பார்கள்” என்று தெரிவித்தார். படம் வரும் பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித் குறித்து தில்ராஜு பேச்சு: ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ இன்று செய்தியாளர்களை சந்தித்துப்பேசினார்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “நான் கதையைத்தான் நம்புகிறேன். நடிகர்கள் அஜித் , ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சூர்யா ஆகியோருக்கு ஏற்ற கதை கிடைத்தால், எதிர்காலத்தில் அவர்களின் படத்தை தயாரிப்பேன்” என்றார். மேலும் ப்ரமோஷன் நிகழ்வில் விஜய் கலந்துகொள்வாரா? என்ற கேள்விக்கு, “விஜய் தெலுங்கு புரொமோஷனுக்கு ஹைதராபாத்திற்கு வர உள்ளார். அவர் என்னிடம் ஏற்கெனவே வாக்கு கொடுத்துவிட்டார். புரொமோஷன் நிகழ்ச்சிக்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது" என்றார்.

ஓடிடியில் வெளியாகும் ஜீவாவின் ‘வரலாறு முக்கியம்’: ‘காஃபி வித் காதல்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜீவா நடித்த படம் ‘வரலாறு முக்கியம்’. சந்தோஷ்ராஜன் இயக்கிய இந்தப் படம் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தில் காஷ்மீரா பர்தேசி, பிரக்யா நக்ரா, விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலிருந்தே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. திரையரங்குகளில் பெரிய அளவில் நம்பிக்கை கொடுக்காத இந்தப் படம் வரும் ஜனவரி 15-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in