'நான் மிருகமாய் மாற' வன்முறை படமல்ல - நடிகர் சசிகுமார் நேர்காணல்

'நான் மிருகமாய் மாற' வன்முறை படமல்ல - நடிகர் சசிகுமார் நேர்காணல்
Updated on
1 min read

சசிகுமார் நடித்திருக்கும் ‘நான் மிருகமாய் மாற’, வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. சத்யசிவா இயக்கி இருக்கும் இந்தப் படத்தைத் செந்தூர் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. மிரட்டலான டிரெய்லர் வரவேற்பைப் பெற்றிருக்க, சசிகுமாரிடம் படம் பற்றி பேசினோம்.

டைட்டிலே பயங்கரமா இருக்கே?

முதல்ல ‘காமன்மேன்’ அப்படின்னு தலைப்பு வச்சிருந்தோம். அந்த தலைப்பை வேற ஒருத்தர் வச்சிருந்ததால, மாத்த வேண்டியதாச்சு. அதனாலதான் இந்த தலைப்பு. அமைதியா தன் வாழ்க்கையை குடும்பத்தோட வாழ்ந்துட்டு இருக்கிற சாதாரண மனுஷனோட வாழ்க்கை, எப்படி வன்முறைக்கு மாறுதுங்கறதுதான் படம். தலைப்புலயே சொன்ன மாதிரி , கதையோட மைய பாத்திரம், மிருகமாய் மாற என்ன காரணம்னு கதை போகும். சுவாரஸ்யமான, பார்வையாளர்களை இழுத்துஉட்கார வைக்கிற மாதிரி திரைக்கதை அமைச்சிருக்கார், இயக்குநர் சத்யசிவா.

டிரெய்லர் பார்த்தா வன்முறை அதிகமா தெரியுதே?

இல்லை. டிரெய்லர்ல அப்படி தெரியலாம். ஆனா, அதுக்குப் பின்னணியில அழகான குடும்பக்கதை இருக்கு. ஹரிப்பிரியா மனைவியா நடிச்சிருக்காங்க. ஒரு மகன், அப்பா, அம்மான்னு குடும்பக் கதையாதான் படம் நகரும்.

விக்ராந்த் வில்லனா நடிச்சிருக்கார்...

ஆமா. இதுல அவரோட இன்னொரு முகத்தைப்பார்க்கலாம். ரொம்ப அருமையா, இயல்பா நடிச்சிருக்கார். அவர் குரல், உடல் மொழியில இருந்து எல்லாத்தையுமே இந்தப் படத்துக்காக மாற்றியிருக்கார். அவர், என்னை எப்படி டார்ச்சர் பண்றார்ங்கறதுதான் விஷயம். அதாவது, கூலிக்குக் கொலை பண்ற விஷயம் இன்னைக்கு அதிகமா நடக்குது. அதுக்குன்னு பயிற்சி கொடுத்து பண்றாங்க. இந்தப் படம் அந்த விஷயத்தையும் பேசும்.

சவுண்ட் என்ஜினீயரா நடிக்கிறீங்க... யாரையும் இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டீங்களா?

சவுண்ட் என்ஜினீயர்னா, திரைப்படங்களுக்கான ‘எபெக்ட்ஸ்’ பண்ணுற கேரக்டர்ல வர்றேன். அந்த சவுண்டை வச்சு குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கிறேன்னு திரைக்கதை இருக்கும். இந்த கேரக்டருக்கு நான் இயக்கிய படங்கள்ல பணியாற்றியவங்க எனக்கு ‘இன்ஸ்பிரேஷனா’ இருந்திருக்காங்க. அதை வச்சு என்னை நான் தயார் பண்ணிக்கிட்டேன்.

படத்துல எல்லா ‘ஷாட்’லயும் மழை இருக்கும்னு சொல்லி இருக்கீங்களே?

கதையை அப்படித்தான் இயக்குநர் உருவாக்கி இருக்கார். ஷூட்டிங் நடந்த அத்தனை நாள்லயும் ‘செட்’ல மழை இருந்தது. எனக்கு கூட ‘கால்ஷீட்’ குறைவுதான். மழைக்குத்தான் அதிகம். கதையோட பார்த்தா, அது யதார்த்தமா இருக்கும்.

எல்லா ஹீரோக்களும் தங்கள் படங்கள்ல பாடல்களை விரும்புவாங்க. இதுல பாடல்களே இல்லையே?

இந்தக் கதைக்குத் தேவைப்படலை. இது த்ரில்லர் படம். பாடல் வச்சா, கதையின் வேகத்தைத் தடுக்கிற மாதிரி இருக்கும்னு இயக்குநர் முடிவு பண்ணினார். ஓபனிங்ல ஒரு பாடல் வைக்கலாம்னு யோசிச்சோம். அதுவும் தேவையில்லைன்னு தோணுச்சு. அதுமட்டுமில்லாம, தயாரிப்பாளரும் இதைஒப்புக்கொண்டதால, சரின்னு வைக்கலை. இன்னைக்கு பாடல்களே குறைஞ்சுட்டுத்தானே வருது. ஒரு படத்துக்கு2 பாடல்கள்தான் இருக்கு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in