Published : 04 Nov 2022 09:11 PM
Last Updated : 04 Nov 2022 09:11 PM

இளையராஜாவுடன் இசையிரவு 14 | ‘பொன் வானம் பன்னீர் தூவுது...’ - கோடு தாண்டும் ஜோடி வண்டுகள்!

தொலைதூர பயணங்களின்போதும், கொட்டும் மழைக் காலங்களிலும், மனது இறுக்கமாகிற நேரங்களிலும், வண்ணத்துப்பூச்சிகளாய் மாறி சிறகு விரிக்கும்போதும், இருள் கவியும் இரவுகளிலும் எப்போதும் துணையிருப்பவர் இசைஞானி இளையராஜா. மழைக்காலங்களில் அவரது பாடல்களே குளிர் கடந்து நம்மை உறங்கச் செய்கின்றன. பெருமழைக் காலம் மட்டுமின்றி, பனிக்காலம், கோடைக் காலம் என எக்காலத்திற்கும் உகந்தது இசைஞானி இளையராஜாவின் இசையும் அவரது பாடல்களும்.

இந்த பாடலும், பலரது ஆல்டைம் பேஃவரைட் லிஸ்டில் தவறாது இடம்பெற்றிருக்கும். கடந்த 1983-ம் ஆண்டு மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இன்று நீ நாளை நான் திரைப்படத்தில் இடம்பெற்ற 'பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்' பாடல்தான் அது. இளையராஜா கவிப்பேரரசு வைரமுத்து கூட்டணியில் உருவான அற்புத அதிசயங்களில் இந்த பாடலும் ஒன்று. பாடலை எஸ்.ஜானகி பாடியிருப்பார்.

அவளது ஆழ்மனதின் தகிப்பால் சூடாகிப்போன மூச்சுக்காற்றுக்கு முன் தூரத்தில் கடக்கும் புயல்காற்றின் வேகம்கூட தோற்றுப் போகிறது. அவனை கண்முன்னே கண்ட கணத்தில், மண்ணில் விழுந்த மழைத்துளிகளாய் மாறிப்போகிறது அவளது மனது. கொதித்து கிடக்கும் அவளது உள்ள பரப்பு முழுவதிலும் விழுந்த மழைத்துளிகள் குளம் போல் வெக்கைத் தணித்து தேங்கி நிற்கின்றன. அதுவரை மறைத்து வைத்திருந்த அப்படியான அவளது நினைவுகளை வெளிச்சம்போட்டு காட்டுகிறது மின்னல்.

தேங்கிய நீரில் துள்ளி குதித்திடும் மான்களைப் போல, கொட்டும் மழையில் காயமின்றி வலிக்கும் அவனது நினைவுகளை சுமக்கும் அவள் துள்ளி குதித்தாடுகிறாள். மழையில் நனைந்த மயில், தோகை விரித்தாடுவதைப் போல அவளது அகத்தின் ஆசைகள் பேராவலாக விரிகின்றன. விடாமல் தொடரும் மழை அவன் குறித்த அவளது நினைவுகளை ஈரமாக்குகின்றன.

மழையில் நனைந்த ஆடைகளைப் போல அவனுக்கான அவளது தகிப்பை கனமாக்குகிறது. கொட்டித் தீர்த்த மழையால் உடலில் ஒட்டிக்கொள்ளும் ஆடைகள் போல, காதல் கடந்த ஆசைகள் அவளை இறுக்கமாகப் பற்றிக் கொள்கின்றன.

வரம்புக்குட்பட்டது, வரம்பை மீறியது என எவ்வித பாகுபாடுமின்றி எல்லா காதலுக்கும் பொதுவாகவே பெய்த மழை, அவளது ஏக்கத்தை குளிர்வித்தது. பேரிடியும் பெருமழையுமாய் பெருக்கெடுத்து அவளது விருப்பங்களில் நனைகிறது. வெட்டவெளி முழுவதையும் ஆக்கிரமித்த பூமழைப் போல, அவனது நினைவுகள் அவளுக்குள்ளும் பூத்திருக்கிறது. அவனை மணமுடிக்கும் வண்ணங்களால் நிறைந்த கனவுகளை, வெள்ளை மழை பெய்து கலைக்கிறது.

மழையும் அந்த பெண்ணின் ஆழ்மன தவிப்புகளும், தகிப்புகளும்தான் பாடலின் மையக்கரு. பாடலில் இடம்பெற்றிருக்கும் கீபோர்ட், கிடார், பேஸ் கிடார், புல்லாங்குழல், வயலின்கள், தபேலா இசைக்கருவிகளும், ஜானகி அம்மாவின் குரலும், இப்பாடலை எப்போது கேட்டாலும், பாடல் கேட்பவர்களை மழையில் நனைத்து குளிர்விக்கும் வகையில் இசையமைத்திருப்பார் மேஸ்ட்ரோ இளையராஜா. பாடலின் பல்லவியை வைரமுத்து,

"பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்" என்று எழுதியிருப்பார்.

பாடல் ஆரம்பிக்கும் முன் வரும் தொடக்கயிசையில், கரைந்து உருகும் நம்மை, இசையோடு இழைந்தோடும் ஜானகி அம்மாவின் மீட்டெடுக்கும். பாடலின் முதல் மற்றும் இரண்டாவது சரணங்களை,

"மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இந்த ஜோடி வண்டுகள் கோடு தாண்டிடுமா
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

தங்கத் தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ
பட்டுப் பூங்கொடி படர இடம் தேடுமோ
மலர்க்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ
மலர்க்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
மழை காமன் காட்டில் பெய்யும் காலமம்மா" என்று வரிகள் தோறும் மழையையும், பெண் மனது தவிப்புகளையும் கவிதையாய் கொய்திருப்பார்.

சும்மா விடுவாரா இசைஞானி, பாடலின் இடையிசைகளில் குறிப்பாக, இரண்டு சரணங்களின் இடையிலும் வரும் ஷெனாய் இசை இந்த பாடலின் மாஸ்டர் பீஸ். இசைஞானியிடம் வெகுகாலமாக பல்லேஷ் என்ற இசைக்கலைஞர் ஷெனாய் இசைக்கருவியை இசைத்து வருகிறார். இசைஞானியின் வருகைக்கு முன்புவரை, துக்கம் மிகுந்த தருணங்களுக்கான இசைக்கருவியாகவே பல நேரங்களில் பாவிக்கப்பட்ட அந்த இசைக்கருவி, இளையராஜாவின் வருகைக்குப் பின்னர், தமிழ் திரையிசையில் நிகழ்த்திய இசை அதிசயங்கள் ஏராளம். இசைபிதாவின் இசைமழை நாளையும் தூவும்..

பொன்வானம் பன்னீர் தூவுது பாடல் இணைப்பு இங்கே

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x