

அவனுக்கான அவளது நினைவுகளும், அவளுக்கான அவனது நினைவுகளும் தானே காதல். கண் இமைத்தலுக்கும், இதயம் துடிப்பதற்குமான இடைவெளியைக்கூட விட்டுவைக்காமல் காதல் நிரம்பிக் கிடக்கும் இத்தகைய தருணங்களில் எங்கிருந்தாவது, எப்படியாவது அவளது சிறு செருமல் கேட்டுவிடாதா என ஏங்கி காத்திருக்கிறது மனது. இதுபோல ஒரு சிச்சுவேஷன் அதுவும் ராகதேவனிடம் சிக்கினால் கேட்கவா வேண்டும்.
கடந்த 1991-ம் ஆண்டு இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த 'கோபுர வாசலிலே' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தாலாட்டும் பூங்காற்று நானல்லவா' பாடல்தான் அது. இப்பாடலை ஐயா வாலி எழுதியிருப்பார். ஆழ்மனதில் பெருகும் காதலின் ஏக்கம் தூக்கத்தை கெடுத்து சுடும் தீயாய், கொடும் நோயாய் பரவுதலை தனக்கே உரிய நடையில் எழுதியிருப்பார்.
யாருமற்ற ஊசிமரக்காடுகளின் உயர்ந்தநின்ற மரங்களில் ஊஞ்சல்கட்டி ஆடுகிறது அவர்களின் காதல். தனது அத்தனை ஆழ்மனது தகிப்பிற்கும் காரணமான காதலனை பூங்காற்றாய் தாலாட்டுகிறாள் காதலி. நள்ளிரவில் கண்விழித்து அவள் மெய்சிலிர்க்க வைத்தவனை ஆரத்தழுவி முத்தமிடுகிறாள். காதலியின் முத்தம் கிடைத்த கணத்தில் இருவருக்கும் இடையிலான காதல் இன்னும் இறுக்கமாகிவிடுகிறது.
வானுக்கும் பூமிக்கும் நிலையில்லாமல் தத்தி தாவிக் குதிக்கிறது மனம். அவளது ஒவ்வொரு ஸ்பரிசத்திலும் உணர்வுகற்ற சிலையாகி உயிர் பெறுகிறது அவனுடல். இருவருக்குள்ளும் பற்றிய காதல் தீ காற்று முழுவதும் வேகமாகப் பரவி ஆவியாய் மேகமாகிறது. தவறுதலாய் தண்ணீர் தொட்டிக்கு கீழே விழுந்த மீனை போல இருவரது உடலும், மனமும் துடிதுடிக்கிறது. பின்னர் ஆளரவமற்ற படிகட்டுகளிலும், மரத்தடிகளின் நிழல்களிலும் நீட்டியமர்ந்து நிதானமாக காதல் கொள்கிறது.
பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் கலந்த அவர்களது காதல் இன்னும் அடர்த்தியாகிறது. ஆடைகளற்ற வானத்தையும் பூமியையும் போலவே அவனது நினைவுகள் அவளையும் மாற்றிவிடுகின்றன. பாறைக் கடந்தோடிவரும் வெள்ளைத் தங்கம் இவர்களது காதல் சூட்டில் மோதி நீராய் ஓடுகிறது. வலைகளைத் தாண்டி காதலை ரசிக்கும் அரிக்கன் விளக்குகள் வெக்கத்தில் வெளிச்சமடிக்கின்றன. காதலனின் மூச்சுக்காற்றின் வெப்பம் தாங்காமல் வளையல், கொலுசு, மெட்டியென ஒவ்வொன்றாய் உருகி உருவி கீழே விழுகின்றன.
பாடலின் பல்லவியை,
"தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ… வாராயோ…
ஓ நெஞ்சமே… ஓ நெஞ்சமே…
என் நெஞ்சமே… உன் தஞ்சமே…
தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா" என்று எழுதியிருப்பார்.
இசைஞானியோ ஒரு பாடலுக்கான அனைத்து இசை குறிப்புகளையும் எழுதி முடித்த பின்னர்தான் அப்பாடலை யார் பாட வேண்டும் என்பதையும் அந்த ஸ்கோர் ஷீட்டில் எழுதுவாராம். இப்பாடலை, இளையராஜாவின் ஆஸ்தான பாடகியான ஜானகி பாடியிருப்பார். இந்தப்பாடலில் ஜானகி அம்மாவின் குரலில் திரையில் தோன்றும் நாயகியின் ஆழ்மனது இணக்கம் தொடங்கி, வெளிக்காட்டப்படும் உணர்வுகள் வரை அனைத்துக்கும் உயிரூட்டியிருப்பார்.
ஓபனிங் ஹம்மிங், முடிந்தவுடன் வரும் அண்ணன் அருண்மொழியின் புல்லாங்குழல் இசையில், ஆயிரக்கணக்கான வண்ணத்துப்பூச்சுகள் ஒரே நேரத்தில் பறந்துவந்து மனசுக்குள் அமர்ந்துகொள்கிறது. இடைவெளியில் மீட்டப்படும் கம்பிக்கருவிகள் பாடல் கேட்பவர்களைக் கட்டியிழுக்கும். தீர்மானத்துடன் பாடலை வழிநடத்தும் தபேலாவின் இசை மெய்மறக்கச் செய்யும்.
இப்பாடலின் முதல் மற்றும் இரண்டாவது சரணங்களை,
"நள்ளிரவில் நான் கண்விழிக்க
உன் நினைவில் என் மெய்சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர
ஆடுது பூந்தோரணம்…..
எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலை நான் பாடும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்
ஆசையில் நாள்தோறும் நான் தொழும்
ஆலயம் நீயல்லவா….." என்று எழுதியிருப்பார் ஐயா வாலி.
வயலின்கள், கிடார், சந்தூர், புல்லாங்குழல், தபேலா என இசைக்கருவிகள் இந்த பாடல் முழுவதும் விரவிக் கடந்தாலும், இரண்டாவது சரணத்துக்கு முன் வரும் அந்த புல்லாங்குழல் இசை இருக்கிறதே, பாடல் கேட்பவர்களின் அத்தனை ஏக்கங்களையும், தவிப்புகளையும், விரக்தியையும், வெறுமையையும் விட்டு விலகச் செய்துவிடும். ராஜாவின் வசீகரிப்பு நாளையும் தொடரும்...