

'மரகத நாணயம்' படத்தின் கதைக்களத்தை எப்படி உருவாக்கினேன் என்று இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் தெரிவித்தார்.
ஆதி, நிக்கி கல்ராணி, ராம்தாஸ், ஆனந்த்ராஜ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மரகத நாணயம்'. புதுமுக இயக்குநர் ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணனிடம் கேட்ட போது, "1100, 1992 மற்றும் 2016 என 3 காலகட்டத்தில் இக்கதை நடைபெறும். 1100 காலத்தில் நடைபெறுவது மட்டும் அனிமேஷன் முறையில் உருவாக்கி இருக்கிறோம். தங்கம் மற்றும் வைரம் ஆகியவற்றை தேடுவதை வைத்து நிறைய படங்கள் வந்துவிட்டன. ஆகையால் தான் இதில் மரகதத்தை பின்னணியாக வைத்து உருவாக்கி இருக்கிறேன்.
ஆதி அணி, ஆனந்த்ராஜ் அணி என இருவருமே தேடிச் செல்வார்கள். அந்த மரகத நாணயம் யாருக்கு கிடைத்தது என்பது தான் திரைக்கதை. அதை அவர்கள் அடைவதற்கு செய்யும் விஷயம் தான் இப்படத்தில் புதிது. ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை அனைத்துக் காட்சிகளும் காமெடி பின்னணியிலே இருக்கும்.
எப்போதுமே இயக்குநர் ஷங்கர் சார் தினசரி நாளிதழ்களில் வரும் செய்திகளை படித்தாலே, அதிலிருந்து சுவாரசியமான கதைகளை உருவாக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். அப்படி நான் படித்த ஒரு செய்தி தான் இத்திரைப்படம். ஆனால், அந்த செய்தி இப்படி நடந்தால் எப்படியிருக்கும் என்று எனது கற்பனையை கலந்திருக்கிறேன்" என்று தெரிவித்தார் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன்.
தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதி இறுதி செய்யப்படும் எனவும் படக்குழு தெரிவித்தது.