Published : 22 Sep 2022 06:09 PM
Last Updated : 22 Sep 2022 06:09 PM

பொன்னியின் செல்வன் பாடல் அனுபவம் 4 | காதோடு சொல் - ததும்பும் வானதி, குந்தவை நினைவலைகள்

'பொன்னியின் செல்வன் பாகம் - 1' படத்தின் 4-வது பாடலாக வெளிவந்தது இந்த 'காதோடு சொல்' பாடல். சோழர் காலத்து கன்னிப்பெண்ணான வானதி, குந்தவையின் "பாய் பெஸ்டி" யார் என்று அறிந்து கொள்ளும் ஆவலில் தொடுக்கும் கேள்விகளாய் அமைந்துள்ளது இந்தப் பாடல். இப்பாடலைக் கேட்ட மாத்திரத்தில் ஈர்க்கும் நறுக்கென்ற வரிகளை எழுதியிருக்கிறார், கிருத்திகா நெல்சன். பாடலை இளமைக் குழையும் குரலில் பாடியிருக்கிறார் ரக்‌ஷிதா சுரேஷ்.

பொன்னியின் செல்வன் நாவலின் 10-வது அத்தியாயத்தில், தனது கனவில் வந்த விண்மீன் குறித்து கேட்டறிந்து கொள்ள குடந்தை சோதிடரை சந்திக்க செல்வாள் குந்தவை. அந்தப் பயணத்தின்போது, அவளுடன் வானதியும் செல்வாள். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரப்போகும் "காதோடு சொல்" பாடலுக்கான பின்னணியும் இதுவாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அந்த 10-வது அத்தியாயத்தில் குந்தவை மற்றும் வானதியின் அழகு இப்படி விவரிக்கப்பட்டிருக்கும்: "சித்திர விசித்திரமாக செய்த அன்ன வடிவமான வண்ணப்படகில் வீற்றிருக்கும் இந்த வனிதாமணிகள் யார்? அவர்களில் ஒருத்தி ஏழுலகத்துக்கும் ராணி எனத் தகும் கம்பீரத் தோற்றமுடைய பெண்மணி. இன்னொருத்தி வீணைத் தந்திகளில் விரல்களை ஓட்டி இன்னிசை எழுப்பிய நங்கை. இருவரும் அழகிகள் என்றாலும் ஒருவருடைய அழகுக்கும் இன்னொருவருடைய அழகுக்கும் மிக்க வேற்றுமை இருந்தது.

ஒருத்தி செந்தாமரை மலரின் கம்பீர சௌந்தரியம் உடையவள். இன்னொருத்தி குமுத மலரின் இனிய அழகை உடையவள். ஒருத்தி பூரண சந்திரன்; இன்னொருத்தி காலைப் பிறை. ஒருத்தி ஆடும் மயில்; இன்னொருத்தி பாடும் குயில். ஒருத்தி இந்திராணி; இன்னொருத்தி மன்மதனின் காதலி. ஒருத்தி வேகவாஹினியான கங்காநதி; இன்னொருத்தி குழைந்து நெளிந்து செல்லும் காவேரி" என்று வர்ணிக்கப்பட்டிருப்பர்.

இந்த விவரிப்புகளுக்கு சற்றும் குறையில்லாமல் மணிரத்னம், ரவிவர்மன், தோட்டா தரணியின் காட்சிப்படுத்தலுக்கு ரசிக்கும்படியான வரிகளை எழுதியிருப்பதால், ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்திருக்கிறது இந்த "சொல்" பாடல்.

பாடலுக்கு மிக குறைவான இசைக்கருவிகளின் பிற்சேர்க்கை பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது. அத்துடன் காவிரியாற்றில் மிதக்கும் அன்னப்படகு குந்தவை, வானதியை தாங்கிச் செல்வதை உணர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான், படகில் மோதும் தண்ணீரின் சப்தத்தையும், தண்ணீர் துளியின் சப்தத்தையும் துணை பாடகர்களுக்கு இணையாக பயன்படுத்தியிருக்கும் விதம் அசாத்தியமாக இருக்கிறது.

"காதோடு சொல்
காதோடு சொல்

யாரென்று சொல்
யாரென்று சொல்

பேரழகனா சொல்
கோடர்மோகனா சொல்
மாவீரனா சொல்
வாய் ஜாலனா சொல்

ஓடாதே சொல்லடி
ஓர் வார்த்தை சொல்

காவலனா சொல்
என் ஏவலனா சொல்
போராளியா சொல்
இல்லை ஓடோடியா சொல்

கீச்சு குரலா சொல்
கவி அரசா சொல்
இப்போதே சொல்
அடி இங்கேயே சொல்

மவுனியா சொல்
மாயனா சொல்"

என்று 2.15 நிமிடங்கள் கொண்ட இந்தப் பாடலில் வரும் பெரும்பாலான கேள்விகளுக்கான பதிலாக வந்தியத்தேவன் இருப்பதாகவும், அவரது நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ள அவரது குணாதிசயம் மற்றும் கதாப்பாத்திரத்தை குறிக்கும் வகையிலேயே வானதியின் கேள்விகள் அமைந்திருப்பதாகவும் சமூக ஊடகங்களில் பலரும் டிகோடிங் செய்து வருகின்றனர்.

சோழ சாம்ராஜ்யத்தை ஆண்ட, ராஜராஜன் காலத்தில் ஒப்பனை செய்வது ஒரு கலையாக பாவிக்கப்பட்டது. மக்கள் தங்களை ஒப்பனை செய்வதில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார்கள். உயர்ந்த குலப் பெண்கள் நறுமணப் பொருட்கள் கலந்த நீரில் நீராடியிருக்கிறார்கள். கண்ணுக்கு மை பூசி, மார்பில் குங்கும குழம்பைப் பூசிக் கொள்ளும் பழக்கம் இருந்தது. விரல்களுக்கும் பாதங்களுக்கும் செம்பஞ்சுக் குழம்பைத் தடவிக்கொண்டார்கள். மல்லிகை மாலைகள், தமிழ் எழுத்துகள் வடிவில் செய்யப்பட்டன. மணப்பெண்கள், கற்பூர மாலை, தீம்பு மாலை, பூந்தாமம், மணி மாலை என்று நிறைய விதங்களில் மாலைகள் சூடிக்கொண்டார்கள்.

நவமணிகள் பதிக்கப்பட்ட அணிகலன்களை அணிந்தார்கள். நெற்றியில் சூட்டு, காதுகளில் மகரக்குழை, கழுத்தில் முத்துமாலை, பிறைவடம், நட்சத்திர மணிமாலை, வலம்புரி முத்துக்கள் கோர்த்த வடம், மாணிக்கத் தாலி ஆகியவற்றை அணிந்து பெண்கள் மிகுந்த அலங்காரத்துடன் காணப்பட்டார்கள். சோழ நாட்டில் பொன்னுக்கும் மணிக்கும் பஞ்சமில்லை என்பதால் பெண்கள் அணிந்த அணிகலன்கள் விதவிதமாக இருந்தன.

ஆண்கள் முழங்கால் வரை ஆடையணிந்தார்கள். தலையில் தலைப்பாகைக் கட்டிக்கொண்டார்கள். ஆண்கள் மேலாடைகள் அணிந்ததாக குறிப்புகள் இல்லை. பெண்களும் மேலாடை உடுத்தியதில்லை. இதை நாம் ஓவியங்கள், சிற்பங்கள் மூலமாக அறிந்துகொள்ள முடியும். அதேசமயம் பெண்கள் மார்பை மறைக்கும் கச்சை கட்டிக்கொண்டார்கள். ஆடைகளுக்கு நறுமணப் புகையூட்டி பின்னர் அணிந்துகொண்டார்கள் என்று வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.

இளம்பச்சைப் பட்டில் கோல்ட் கலர் பார்டர் நிற புடவையணிந்த குந்தவையின் கழுத்துப் பகுதியை நிறைத்துள்ள ஆரங்களையும், கருப்புநிறப் பட்டில் அதே கோல்ட் நிற பார்டர் நிற புடவையணிந்த வானதியின் தலையோடு காதை இணைக்கும் மாட்டல்களையும் வெள்ளித் திரையில் இன்னும் பிரமாண்டமாக பார்த்து வியக்க, ரசிக்க இன்னும் 8 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

இணைப்பு : Sol - Lyric Video

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x