Published : 19 Sep 2022 02:25 PM
Last Updated : 19 Sep 2022 02:25 PM

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ரஜினி கேட்டும் மறுத்தது ஏன்? - மணிரத்னம் நேர்காணல்

மணிரத்னம் | கோப்புப் படம்

பெரும் சதியோடும் காதலோடும் பழிவாங்கலோடும் பல வருடங்களாகப் புத்தகங்களுக்குள் வாழ்ந்த ‘பொன்னியின் செல்வன்’ கேரக்டர்கள் இப்போது திரைக்கு வருகிறார்கள், கம்பீரமாக. பலர் முயற்சித்தும் படமாக்க முடியாத வந்தியத்தேவன், ராஜராஜசோழன், ஆதித்ய கரிகாலன், நந்தினி உள்ளிட்டோரை திரைக்கு கொண்டு வந்திருக்கிறார் மணிரத்னம். வரும் 30-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி அவரிடம் பேசினோம்.

கமல் நடிப்பில் 80-கள்ல இந்தப் படத்தை ஆரம்பிக்கறதா இருந்தீங்க. இவ்வளவு வருஷம் கழிச்சு, படமாக்கினதால என்னென்ன மாற்றங்கள் பண்ணியிருக்கீங்க

மாற்றம்னு ஏதுமில்லை. ஆனா, சுதந்திரம் கிடைச்சது. இப்ப பார்வையாளர்களுக்கு இரண்டு பகுதிகளா கதை சொல்ல முடியும். அதை அவங்க ஏத்துக்க தயாரா இருக்காங்க முன்னால அப்படி இல்லை. அதனால, இந்தப் படத்தை இவ்வளவு வருஷமா பண்ணாதது சரின்னு தோணுது. இந்தக் கதைக்கு 2 பகுதி தேவைப்படுது. இதுதான் இந்தப் படத்துக்கான சரியான நேரம்னு நினைக்கிறேன்.

இந்தந்த கேரக்டர்களுக்கு இவங்கதான் சரியா இருப்பாங்கன்னு எப்படி தேர்வு பண்ணுனீங்க?

‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படிக்கும்போது, அதை படமா எடுக்கணும்னு நினைச்சு,படிக்கலை. படம் பண்ணும் போது இந்த கேரக்டர்கள்ல இவங்க நடிச்சா நல்லாயிருக்கும்னு நினைச்சு வேலைகளை ஆரம்பிச்சோம். அது சரியா இருந்தது. எல்லா நடிகர்களுமே படத்துல தங்களை அந்த கேரக்டராகவே மாத்தியிருக்காங்க.

வசனங்கள் செந்தமிழ்ல இருக்குமா? இப்போ நாம பேசற மாதிரி இருக்குமா?

நாங்க இதைதான் முதல்ல ரொம்ப யோசிச்சோம். நாடகங்கள்ல பேசற மாதிரி இருக்கக் கூடாது, நடிகர்கள் நடிக்கும்போதுவார்த்தைகளும் இயல்பா வரணும். எல்லாத்தையும் நிறைய யோசிச்சுதான் எழுதினோம். தூய தமிழ்லதான் வசனங்கள் இருக்கும்.

ரஜினிகாந்த் கேட்டும் அவரை நீங்க நடிக்க வைக்காதது ஏன்?

நான் நல்லாயிருக்கறது பிடிக்கலையா உங்களுக்கு? அவர் ரசிகர்கள் எல்லாம் என்னைஎன்ன பண்ணுவாங்க?. அவர் நடிச்சா, கதையை மாத்தணும். அப்புறம் கல்கி ரசிகர்கள்கிட்ட மாட்டணும். அது சரியா வராதுங்கறதால, அவரை நடிக்க வைக்கல.

கதையில, நந்தினிக்கு முக்கியத்துவம் இருக்கு. அதுக்கு ஐஸ்வர்யா ராய்தான் சரின்னு எப்படி முடிவு பண்ணினீங்க?

ரஜினி சொன்ன மாதிரி, முதல்ல யோசிக்கும்போது, இந்திரேகாவை நினைச்சிருந்தோம். அப்புறம் இவங்கதான் சரியா இருப்பாங்கன்னு நினைச்சோம். அவங்களையே நடிக்க வச்சோம்.

எழுத்தாளர் ஜெயமோகனோட பங்களிப்பு எப்படியிருக்கு?

அவர் பங்களிப்பு ரொம்ப அதிகம். 5 பார்ட் கதையை 3 மணி நேரத்துக்குள்ள சொல்லணும். இந்தக் கதையிலநான் பயந்த விஷயம், வசனங்கள். எளிமையா இருக்கணும்னு நினைச்சேன். என்னோட இந்தப் பயத்தைஜெயமோகன் ரொம்ப எளிமையா சரி பண்ணிட்டார். நாவல்ல, கல்கி ஒவ்வொரு கேரக்டரையும்,அழகா படைச்சிருப்பார். சுந்தரச் சோழனைவிவரிக்கணும்னா, நாவல்ல நிறைய எழுத முடியும். சினிமாவுல காட்டும்போது அவர் பேசற விஷயங்கள், உடல் மொழி, இடம்... அதை வச்சுதான் சொல்ல முடியும். இந்த மாதிரி சில விஷயங்கள் தான் அதைக் காட்டிக்கொடுக்கும். அதுல குமரவேலும் ஜெயமோகனும் சிறப்பாகப் பண்ணியிருக்காங்க.

‘பொன்னியின் செல்வன்’ தாக்கத்துல உங்க படங்கள்ல இதுக்கு முன்னால, ஏதாவது காட்சி வச்சிருக்கீங்களா?

இந்த நாவலின் ரசிகன் நான். இதைப் படிச்சா அந்தப் பாதிப்பு இல்லாம யாரும் இருக்க முடியாது. ‘தளபதி’ படத்துல 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' பாடல்ல ஷோபனாவை பூங்குழலி மாதிரி பயன்படுத்தி இருப்பேன். அது மட்டும்தான் பண்ணியிருக்கேன்.

இரண்டாம் பாகம் எப்ப வரும்?

ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. இந்தப் படம் ரிலீஸ் ஆகி 7 மாசங்களுக்குப் பிறகு வெளியாகும். கிராபிக்ஸ் வேலைகள் பண்ண வேண்டியிருக்கு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x