‘நம்ம கண்ணுக்கு தெரிஞ்சது நிகழ்காலம் மட்டும்தான்’ - அருள்நிதியின் ‘டைரி’ ட்ரெய்லர் வெளியீடு

‘நம்ம கண்ணுக்கு தெரிஞ்சது நிகழ்காலம் மட்டும்தான்’ - அருள்நிதியின் ‘டைரி’ ட்ரெய்லர் வெளியீடு
Updated on
1 min read

சென்னை: நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகி உள்ள ‘டைரி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரை நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம் மற்றும் அமீர் கான் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் அருள்நிதி. டிமான்ட்டி காலனி, பிருந்தாவனம், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் போன்ற படங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம்.

இப்போது ‘டைரி’ எனும் தலைப்பில் உருவாகி உள்ள படத்தில் அவர் நடித்துள்ளார். இந்தப் படம் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் என தெரிகிறது. இதனை 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.கதிரேசன் தயாரித்துள்ளார். படத்தை அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ளார். இவர் கோப்ரா படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றி உள்ளார் என தெரிகிறது. இதன் திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சுமார் 2.27 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த ட்ரெய்லரில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நடைபெற்று வரும் விபத்து குறித்து பேசப்பட்டுள்ளது. அதன் விசாரணையை அருள்நிதி மேற்கொள்வது போல காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்தப் படம் திரைக்கு வர உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in