முதல் பார்வை: 24 - மிஸ் ஆகாத டைமிங்!

முதல் பார்வை: 24 -  மிஸ் ஆகாத டைமிங்!
Updated on
2 min read

'மனம்' தெலுங்குப் படத்தின் மூலம் பரவலாக கவனம் ஈர்த்த இயக்குநர் விக்ரம் குமாரின் படம், 'அஞ்சான்', 'மாஸ்' படங்களுக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம், டைம் டிராவலை மையமாகக் கொண்ட படம் என்ற இந்தக் காரணங்களே '24' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

ஆத்ரேயா என சூர்யா கர்ஜிக்கும் ட்ரெய்லர் யூடியூபில் செம ஹிட். படமும் அப்படியே இருக்க வேண்டும். சூர்யாவின் கிராஃப் எகிற வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் தியேட்டருக்குள் நுழைந்தோம்.

சூர்யாவின் பெயரை டைட்டில் கார்டில் போட்டவுடன் அவரது ரசிகர்கள் கைதட்டி, விசிலடித்து, ஆரவாரக் கூச்சல் எழுப்பி தியேட்டரை அதிரச் செய்தனர்.

சில வசனங்கள் கூட கேட்காத அளவுக்கு ரசிகர்கள் படம் ஆரம்பித்த சில நிமிடங்கள் வரை ஆரவாரம் எழுப்பினர்.

கதை: அண்ணன் சூர்யா, தம்பி சூர்யாவிடம் இருக்கும் வாட்ச்சை பறிக்க வருகிறார். அந்த வாட்ச்சை ஏன் பறிக்க நினைக்கிறார்? அதற்குள் இருக்கும் ரகசியம் என்ன? அந்த வாட்ச் யாருக்குக் கிடைக்கிறது? அதனால் ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்பது டைம் டிராவல் சார்ந்த மீதிக் கதை.

படத்தின் மிகப் பெரிய பலம் சூர்யா தான். அழகாக சிரிக்கிறார். நன்றாக திட்டமிடுகிறார். பாசத்துக்காக ஏங்குகிறார். நகைச்சுவைக்கும் பங்களிப்பு வழங்கியிருக்கிறார். ஃபெர்பார்மராக காட்டிக் கொள்ளவும் முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அது முழுமையடையவில்லை என்பதுதான் குறை. சின்ன சின்ன ரியாக்‌ஷன்களில் கூட 'வாரணம் ஆயிரம்', 'அயன்' சூர்யாவே தெரிகிறார்.

நடை, உடையில் ஈர்க்கும் சூர்யா பாவனையில் மட்டும் இன்னும் வேறு சில பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம். இல்லையென்றால் எல்லா படங்களிலும் சூர்யா ஒரே மாதிரி நடிக்கிறார் என்ற பெயர் மட்டுமே மிஞ்சும். ஹஸ்கி வாய்ஸில் பேசும் போது இன்னும் கௌதம் மேனன் ஸ்கூலில் இருந்து வெளியே வராமல் அடம் பிடிப்பதை காண முடிகிறது. உங்க ரசிகர்களுக்காகவாவது கொஞ்சம் மாறித்தான் பாருங்களேன் சூர்யா!

'நான் வாட்ச் மெக்கானிக். உலகத்துலயே இதெல்லாம் சர்வ சாதாரணம்' என்று சூர்யா அடிக்கடி ஒரே மாதிரி சொன்னாலும் தியேட்டர் தெறிக்கிறது.

தமிழ் சினிமாவின் வழக்கமான கதாநாயகியாக சமந்தா. நம்புவதா? வேண்டாமா? என்ற குழப்பத்திலும், தவிப்பிலும் ஸ்கோர் செய்கிறார். 'கால் தரையில பட்டுடுச்சி' என சமந்தா சொல்லும்போது ரசிகர்கள் அஞ்சாமல் அப்ளாஸ் கொடுத்தனர்.

நித்யா மேனன் சில காட்சிகளே வந்து போனாலும் மனதில் நிறைகிறார். பழகிய கதாபாத்திரமாக இருந்தாலும் சரண்யா பொன்வண்ணன் பின்னி எடுக்கிறார்.

கிரிஷ் கர்னாட்டை படத்தில் பயன்படுத்தவேயில்லை. சார்லி, சத்யன், அஜய், அப்புக்குட்டி, மோகன்ராமன் ஆகியோர் பொருத்தமான தேர்வு.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையும், திருநாவுக்கரசின் ஒளிப்பதிவும் படத்துக்கு கூடுதல் பலம். காலம் என் காதலியோ, ஓடாதே பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.

பிரவீன் பூடி முதல் பாதியிலும், இரண்டாம் பாதியில் சமந்தா போர்ஷனிலும் தாராளமாகக் கத்தரி போட்டிருக்கலாம். அட்ரஸ் சொல்வது, சில வசனங்களை ரிப்பீட் பண்ணுவதெல்லாம் பழைய டெக்னிக். அதை நறுக் சுருக் என மாற்றி தந்திருக்கலாம்.

டைம் டிராவலை மையப்படுத்தி ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் சினிமாவைக் கொடுக்க முனைந்ததற்காக இயக்குநர் விக்ரம் குமாருக்கு வாழ்த்துகள்.

காதல் காட்சிகளில் புதுமையோ, புத்துணர்வோ இல்லை. வசனங்களை இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம். ஆனால், டைம் டிராவலை மையப்படுத்திய திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியிருப்பது சிறப்பு.

கான்செப்ட் சினிமாவுக்குள் ஃபார்மட் சினிமாவைக் கொண்டு வராமல் புதுசு பண்ணியிருந்தால் இது வேற லெவல் சினிமா என்று கம்பீரத்துடன் சொல்லியிருக்கலாம்.

காதல், கலாய்ப்பு, மேட்ச் என்று அந்த டைம் டிராவல் கான்செப்ட்டை லேசுபாசாக அணுகிய விதத்திலும், அதற்குப் பிறகு புத்திசாலித்தனமாய் ஸ்கெட்ச் போட்டு திரைக்கதையை நகர்த்திய விதத்திலும் '24' சரியான ஃபார்முலா சினிமாவாக, மிஸ் ஆகாத டைமிங் சினிமாவாக அமைந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in