சுப்ரமணியபுரம்... இது நண்பர்களின் கதை மட்டுல்ல! - அந்த 5 ‘ப்ளாட் பாயிண்ட்’டுகள்
ஒரு படத்தைப் பார்வையாளர்கள் கொண்டாடுவதற்கு மிக முக்கியமான ‘ரசவாதம்’ஒன்று திரையரங்கில் நடந்தாக வேண்டும். கதாபாத்திரங்களின் உணர்ச்சிகள், பார்வையாளர்களின் உணர்ச்சிகளோடு ஒத்துப்போக வேண்டும் என்பதே அது. திரையில் தோன்றும் எல்லா கதாபாத்திரங்களோடும் பார்வையாளர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளமுடியாது.
ஆனால் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகள், பார்வையாளர்களின் உணர்ச்சிகளை உரசி, அவர்களைக் கதையின் போக்குடன் பிணைத்துவிடமுடியும். அதேநேரம் எல்லோருக்குள்ளும் மிச்சமிருக்கும் நினைவுகளில் புதைந்திருக்கும் உணர்ச்சிகளின் ஒருபகுதியை மீட்டுத்தர வேண்டும். ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் திரைக்கதை சாதித்ததும் அதைத்தான்.
‘சுப்ரமணியபுர’த்தில் பார்வையாளர்களை உரசிச்சென்ற முதல் உணர்ச்சி நட்பும் அதில் இழையோடிய விசுவாசமும்தான். வாழ்விடம் உருவாக்கித் தந்த நட்பில் அறுபடாமல் இழையோடும் விசுவாசத்தையும் அதுதரும் உயிர்த்துடிப்புமிக்க உற்சாகத்தையும் அழகர், பரமன், காசி, டுமுக்கான், சித்தன் ஆகிய ஐந்து எளிய நண்பர்களிடம் காணமுடியும்.
அவர்களது சில்லறைத்தனமான சேட்டைகள், காதல், நம்பிக்கை, அந்த நம்பிக்கையின்பால் காட்டும் நன்றியுணர்ச்சியால் அவர்கள் குற்றத்தில் வீழ்ந்து உழல்வது, அவர்களது பிரிவு, துரோகம், அஸ்தமனம் என அனைத்திலும் பார்வையாளர்கள் பங்கேற்பாளர்கள்போல மாறி, படத்தை ஊன்றி ரசிக்கச் செய்துவிட்டது அதன் திரைக்கதை.
இது நியோ நாய்ர் படமா? - ‘இது நண்பர்களின் கதைதானே, இதை எந்த அடிப்படையில் நியோ-நாய்ர் (Neo-Noir film) என்று வகைப்படுத்துகிறீர்கள்’ என சில வாசகர்கள் கேட்டிருந்தார்கள். இது நண்பர்களின் கதை மட்டுல்ல; சுப்ரமணியபுரம் என்ற ஊரின் கதையும்தான். நியோ நாய்ர் வகைப்படங்களின் பொதுவான தன்மை என்பது அதன் கதைத்தன்மையில் இருக்கும் அவலம் (Dark Storyline).
அதேபோல வாழ்க்கையை நேர்வழியில் நடத்திவிடலாம் என நம்பிக்கொண்டிருக்கும் விளிம்புநிலைக் கதாபாத்திரங்கள், அதற்குநேர்மாறாக தீய பாதையில் வீழ்ந்துவிடும் பரிதாபம் (Dark characters). திசைமாறிச் சென்றதால் அடுத்தடுத்த குற்றங்களைச் செய்யவேண்டிய கட்டாயத்துக்கும் வற்புறுத்தலுக்கும் நியோ நாய்ர் கதாபாத்திரங்கள் தள்ளப்பட்டுவிடுகின்றன.
மிகமுக்கியமாக நன்மை, தீமை ஆகிய மரபார்ந்த நெறிகளிலிருந்து இந்தக் கதாபாத்திரங்கள் விலகி நிற்கவேண்டிய அவலமான வாழ்க்கைச் சூழலில் சிக்கிக்கொள்வதும், இந்தக் கதாபாத்திரங்கள் நல்லவர்களா இல்லை கெட்டவர்களா என்று அடையாளம் காணமுடியாத குழப்பமும் தவிப்புமான திரிபுநிலையில் உழலக் கூடியவையாக மாறிவிடுகின்றன.
ஹாலிவுட்டில் மௌனப்பட காலத்திலேயே ‘சைலண்ட் க்ரைம் பிலிம்ஸ்’ என்ற விமர்சகர்களின் வருணிப்புடன் நியோ நாய்ர் படங்களின் வருகை தொடங்கிவிட்டது. ஆனால் அது ஒரு தனித்த வகையாக 40-களுக்குப்பிறகே வளர்ந்து உருபெற்றது. ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் இயக்குநர் சசிகுமார் ஒரு நியோ நாய்ர் படம் எடுக்கவேண்டும் என்ற லட்சியத்துடன் இந்தத் திரைக்கதையை எழுதியிருப்பார் என்று திட்டவட்டமாகக் கூறமுடியாது.
ஆனால் அவர் பார்த்தும் பணியாற்றியும் வந்த பாலா, அமீர் போன்ற இயக்குநர்கள் நியோ நாய்ர் வகைப் படங்களின் தாக்கத்தை உள்வாங்கிக்கொண்டு படங்களைத் தந்தவர்கள். அந்த வகையில் சசிகுமாரும் அதே பாதையில் பயணிக்கவிரும்பியிருக்கலாம். என்றாலும் அவரையும் அறியாமல் அசலான பிராந்தியத் தன்மையுடன் கூடிய நியோ நாய்ர் படமாக ‘சுப்ரமணியபுரம்’உருவாக்கம் பெற்றதற்கு அவரது திரைக்கதையுடன் அவரது குழுவினரின் உழைப்பும் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
ஒரு குற்றமும் அதன் தொடர்ச்சியும்: சில்லறை வம்புகளில் பொழுதுபோக்கும் சராசரி இளைஞர்களின் வாழ்க்கை, திடீரென குற்ற வன்முறையின் கொடூரப் பாதையில் திசைதிரும்புவதும் ஒரு குற்றத்தின் தொடர்ச்சியாக அடுத்தடுத்த குற்றங்களில் அவர்கள் ஈடுபடும் நிலை உருவாவதும் அந்தக் குற்றங்களின் அழுத்தம் உருவாக்கும் நெருக்கடிகள் வழியே அவர்கள் வீழ்வதுமாகக் கதை முடிவுக்கு வருகிறது.
திரைக்கதையின் தொடக்கப்பகுதியின் முடிவில் முக்கிய பிரச்சினையாக நிகழும் சம்பவமே முதல் ‘ப்ளாட் பாயிண்ட்- 1’ எனப் பார்த்தோம். ‘சுப்ரமணியபுர’த்தின் முன்னாள் கவுன்சிலருடைய தம்பி கனகு கேட்டுக்கொண்டதற்காக, அழகர், பரமன், காசி ஆகிய மூவரும் சேர்ந்து முதல் கொலையைச் செய்வதே முதல் பிளாட் பாயிண்ட். அதுவே கதையை நடுப்பகுதியை நோக்கிச் செலுத்துகிறது.
“எனது சொத்துகளை விற்றாவது உங்களை வெளியே எடுப்பேன்”என்று சொன்ன கனகு, அவர்களை வெளியே எடுத்தால் கொலையின் மூலகர்த்தா யாரென்பது அரசியல் வட்டாரத்துக்குத் தெரிந்துவிடும் என்பதை மனதில் வைத்து, அதைச் செய்யாமல் ஏமாற்றிவிடுகிறார்.
அந்த நேரத்தில் அழகரும் பரமனும் கூலிக்காக அல்லாமல் வேண்டப்பட்ட ஒருவருக்காகக் கொலைசெய்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்கிறார் சக சிறைக்கைதி ஒருவர். அவரே இவர்கள் இருவரையும் பிணையில் வெளியே எடுக்க ஏற்பாடுசெய்கிறார். வெளியே வந்த பரமனும் அழகரும் தக்க தருணத்துக்காகக் காத்திருக்காமல் உணர்ச்சிக் கொந்தளிப்பில் கனகுவின் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து அவரைக் கொல்லத் தேடுகிறார்கள்.
கனகுவின் அண்ணன் மகளான துளசியை அந்த இக்கட்டான சமயத்தில் காணும் அழகர் பேசும் பேச்சால், இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் இருப்பதை துளசியின் அறையில் ஒளிந்திருக்கும் கனகு அறிந்துகொள்கிறான். பரமனும் அழகரும் இத்தனை அவசரப்பட்டிருக்கவேண்டுமா, அழகர் - துளசியின் காதல் கனகுக்குத் தெரியவந்ததால் துளசிக்கு என்ன ஆகுமோ என்ற தவிப்பை உருவாக்கி, மூன்றாவது பிளாட் பாயிண்டுக்கான முன்னோட்டமாக மாறி திரைக்கதையை உந்தித் தள்ளுகிறது இந்தக் காட்சி.
தூண்டிலாகும் காதலும் விலைபோகும் நட்பும்: ஆனால், கதையை புதிய திசையில் செலுத்தும் மூன்றாவது பிளாட் பாயிண்ட் அழகரும் பரமனும் தங்களைப் பிணையில் வெளியே எடுத்தவருக்குப் பிரதியுபகாரமாக செய்யும் இரண்டாவது கொலை. அது தரும் துணிவு, பரமனையும் அழகரையும் வன்முறையால் பிரச்சினைகளைத் தீர்த்துவிடமுடியும் என்று நம்ப வைக்கிறது. அதைத் தொடர்ந்து கனகு அனுப்பிய கூலிப்படை ஆட்கள் சிலரைக் கொன்றாலும் நான்காவது பிளாட் பாயிண்ட், காதலியைத் தூண்டிலாகக் கொண்டு, வஞ்சகமாக அழகர் வீழ்த்தப்படும் காட்சி.
கனகு எனும் சுயநல வஞ்சகனால் ரத்தக்கவிச்சியும் ரத்தக்கறையுமே என்றாகிப்போன வாழ்க்கையில் உயிருக்கு உயிரான நண்பனின் கொலைக்கு ரத்தபலியாக கனகுவை காவு வாங்குகிறான் பரமன். இது திரைக்கதையின் ஐந்தாவது பிளாட் பாயின்ட்.
கனகுவும் கொல்லப்பட்டபின் கதை முடிந்துவிட்டதாகப் பார்வையாளர்கள் எண்ணிக்கொண்டிருக்கும்போது காசி கதாபாத்திரமும் டுமுக்கான் கதாபாத்திரமும் படத்துக்கான முடிவை எழுதுகின்றன. தொடக்கம்முதலே பணத்துக்கான உந்துதலுடன் உலவும் காசி கதாபாத்திரம், இறுதியில் பணத்துக்காக நட்பை விற்று, பரமனின் உயிரை வாங்கிக்கொள்கிறது. நட்பை அங்கயீனம் செய்யவிரும்பாத டுமுக்கனால், காசி வாழத்தகுதி அற்றவனாகக் கருதப்பட்டு தண்டிக்கப்படுவதோடு படம் முடிகிறது.
நண்பர்களில் காசியைத் தவிர மற்ற நால்வரும் மனதளவில் அழகானவர்கள், கபடமற்றவர்கள், நல்லவர்கள் என்ற மதிப்பீட்டை நட்பு, காதல், வன்மம், துரோகம் ஆகியவற்றின் பின்னணியில் கூறி, படத்தின் நாயகர்களைப் பார்வையாளர்களின் பக்கம் இழுத்து நிறுத்திவிடுகிறது திரைக்கதை.
தொடர்புக்கு: jesudoss.c@thehindutamil.co.in
| ‘சுப்பிரமணியபுரம்’ வெளியாகி 14 ஆண்டுகள் ஆனதை ஒட்டிய மறுபகிர்வு கட்டுரை இது. |
