முதல் பார்வை | ராக்கெட்ரி நம்பி விளைவு - அறிவியலையும் உணர்வியலையும் சுமந்த பயணம்!

முதல் பார்வை | ராக்கெட்ரி நம்பி விளைவு - அறிவியலையும் உணர்வியலையும் சுமந்த பயணம்!
Updated on
2 min read

நாசா வேலையை புறந்தள்ளி தேசத்திற்காக இஸ்ரோவில் நுழைந்த விஞ்ஞானி ஒருவரின் சொல்லப்படாத கதை தான் 'ராக்கெட்ரி நம்பி விளைவு'.

ராக்கெட் தொழில்நுட்பத்தில் அதீத ஆர்வம் கொண்ட நம்பி நாரயணன் (மாதவன்), உலகப் புகழ் பெற்ற அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தில் கெமிக்கல் ராக்கெட் புரோபல்ஷன் தொடர்பான ஆராய்ச்சியை முடிக்கிறார். இதைதொடர்ந்து அவருக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவில் பணிபுரிய அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதைப் புறந்தள்ளி அவர் இந்தியா திரும்புகிறார்.

இஸ்ரோவில் இணைந்து இந்தியாவின் ராக்கெட் தொழில்நுட்பத்திற்காக அவர் ஆற்றும் பங்கு, அதையொட்டி நடக்கும் சில விரும்பத்தகாத நிகழ்வுகள், அதனால் ஏற்படும் பாதிப்பு என விரிகிறது 'ராக்கெட்ரி நம்பி விளைவு' படத்தின் திரைக்கதை.

நம்பி நாராயணனாக மாதவன். வெளுத்த தாடி, வெளியில் தெரியும் தொப்பை, வசன உச்சரிப்பு, உடல்மொழி என உண்மையான விஞ்ஞானி நம்பி நாராயணனை நடிப்பின் மூலம் பிரதியெடுத்திருக்கிறார். இளமையிலிருந்து முதுமை வரையிலான ஒருவரின் வாழ்க்கை பயணத்தின் காலக்கட்டத்தை ஒவ்வொன்றாக தன் உடல்மொழியிலும் கெட்டப்பிலும் காட்சிபடுத்தியதில் மெனக்கெட்டிருக்கிறார்.

அவருக்கு அடுத்தபடியாக மீனா நாராயணனாக நடித்திருக்கும் சிம்ரன் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக ஒரிடத்தில் யாரும் எதிர்பார்க்காத வேளையில், திடீரென பொங்கி எழும் அவரது நடிப்பு நம்மை உலுக்கிவிடுகிறது.

தன் கணவர் மீதான பொய் குற்றச்சாட்டால் மனமுடைந்துபோவது, அவமானங்களை எதிர்கொள்வது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் எதிர்கொள்ளும் துன்பங்கள் நம்பி நாராயணனின் மனைவியை கண் முன் நிறுத்துகிறது. சூர்யா சில நிமிடங்களே வந்தாலும் ஈர்க்கிறார். படத்தின் இறுதியில் ஒட்டுமொத்த தேசத்தின் கூட்டு மனசாட்சியாக பிரதிபலிக்கிறார்.

உன்னி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாம் மோகனின் நடிப்பை படத்தில் கவனம் பெறுகிறது. தனது மகனின் இழப்பை எதிர்கொள்ளும் காட்சிகளில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ராஜீவ் ரவீந்திரநாதன், ஜெகன் உள்ளிட்ட பலரும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

மாதவன் இயக்கியிருக்கும் இப்படத்தை ஒரு விஞ்ஞானியின் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படமாக மட்டும் பார்க்க முடியாது. மாறாக, பொய்க் குற்றச்சாட்டு சுமந்தப்பட்டு அநீதியால் பாதிக்கப்பட்ட தன் தாய்நாட்டின் மீது பற்றுகொண்ட ஒருவரின் கதையாக பார்க்கவேண்டியிருக்கிறது. அப்படிப்பார்க்கும்போது மாதவனின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. படத்தைப்பொறுத்தவரை அதன் முதல் பாதி, முழுவதும் டெக்னிக்கலான வார்த்தைகளாலும், ராக்கெட் தொழில்நுட்பம், அறிவியல் என புரிந்துகொள்வதற்கு சற்று கடினமாகவே கடக்கிறது.

நினைவில் வைத்துகொள்ளவும் போராட வேண்டியிருக்கிறது. முதல் பாதி முழுக்க சயின்ஸாகவும், இரண்டாம் பாதி சென்டிமென்டாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாதியில் நம்பி நாராயணனின் போராட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் அழுத்தமாக காட்டியிருக்கலாமோ எனவும் தோன்றுகிறது. இருப்பினும் முதல் பாதியை விட, இரண்டாம் பாதி மனதில் ஒட்டிக்கொள்கிறது.

லிக்விட் இன்ஜின், சாலிட் இன்ஜின் உள்ளிட்ட சில டெக்னிக்கல் வார்த்தைகளையும் கற்றுக்கொள்ள முடிகிறது. வாழ்க்கை வரலாறு என்பதால் ஆவணப்படமாக இருக்குமோ என என்ற எண்ணம் தோன்றிவிடக்கூடாது என்பதில் மாதவன் உறுதியாக இருந்திருக்கிறார். படம் மெதுவாக நகர்ந்தாலும் பார்வையாளர்களை மிகச் சிறப்பாக எங்கேஜ் செய்கிறது.

படத்தின் முதல் லாங் ஷாட் கொண்டு சென்ற விதம் ஒளிப்பதிவின் தரத்தை உணர்த்துகிறது. ஒளிப்பதிவாளர் சிர்ஷா ரே-வின் கேமரா படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறது. சாம் சிஎஸ்-ன் பிண்ணனி இசை ஏமாற்றவில்லை. தவிர, விஎஃப்எக்ஸ் காட்சிகளும் நிறைவைத்தருகின்றன.

மொத்தத்தில் சயின்சையும், சென்டிமென்டையும் சுமந்துகொண்டு திரைமொழி என்ஜினுடன் பறக்க முயன்று வென்றிருக்கிறது 'ராக்கெட்ரி நம்பி விளைவு'.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in