

“விமானப் படைப் பணி என்ற ஒன்று இல்லாவிட்டால் எனக்கு தமிழகத்தைத் தவிர்த்து வேறு ஒன்றுமே தெரிந்திருக்காது. விமானப் படையில் பணியாற்றியதுதான் எனக்குள் மாறா தேசப் பற்றைப் புகுத்தியது. 1971-ம் ஆண்டு ஜம்மு - காஷ்மீர் பகுதிக்கு பணியிட மாற்றம் கிடைத்தது. அப்போது போர் நடந்து கொண்டிருந்தது. போர் என்றால் என்ன என்பதை கண் முன்னே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது” என்று தன் அனுபவங்களை விவரிக்கிறார் டெல்லி கணேஷ்.
விமானப் படைப் பணி தொடங்கி நடிகராக, காமெடி நடிகராக, குணச்சித்திர நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பது வரையிலான தன் வாழ்க்கைப் பயணத்தை, அந்த அனுபவங்களை ‘இந்து தமிழ் திசை’ யூடியூப் சேனலின் ‘ரிவைண்டு வித் ராம்ஜி’ வீடியோ பேட்டி நிகழ்ச்சியில், மனம் திறந்து பகிர்ந்து கொண்டார் நடிகர் டெல்லி கணேஷ். அந்த உரையாடலில் இருந்து...
உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்கள்?
"தென்காசி அருகில் உள்ள கீழப்பாவூர் என்ற ஊரில் பிறந்தேன். இது என் அம்மா ஊர். நெல்லை - தூத்துக்குடிக்கு இடையே உள்ள வல்லநாடுதான் என் அப்பாவின் ஊர். அங்கேதான் எஸ்எஸ்எல்சி வரை படித்தேன். பதினோறாம் வகுப்பு படிக்க என்னை மதுரைக்கு அனுப்பினார் அப்பா. குடும்பத்தில் அப்பாதான் மூத்தவர். அம்மாவும் காலமாகிவிட்டார். எனக்கு ஒரு அக்கா மற்றும் வாய் பேச முடியாத காது கேளாத தம்பி இருக்கிறார்கள்.
அக்காவின் திருமணத்திற்குப் பின், அப்பாவுடன் வீட்டைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பில் இருந்தேன். என் இரண்டு சித்தப்பாக்களும் மதுரையில் ஆசிரியர்களாக இருந்தார்கள். என்னை படிப்பதற்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனர். அப்பாவும் ஆசிரியர்தான்! அப்பா மகாதேவனுக்கு ஊரில் நல்ல மரியாதை. அனைவரும் மதிக்கக்கூடிய நபராக வாழ்ந்தார். ஊர் மக்கள் அனைவரும் அப்பாவை 'மாது ஐயர்' என்று பிரியமாக அழைப்பார்கள். அதற்குக் காரணம்... சாதி, மத வேற்றுமையின்றி அனைவரிடமும் சகஜமாக பழகுவார் அப்பா."
உங்கள் வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியானதான காலகட்டம் என்று எதைச் சொல்வீர்கள்?
"நான் படிப்பில் சுமாரான மாணவன்தான். கல்லூரி செல்லும் அளவிற்கு மதிப்பெண்கள் கிடைக்காததால் ஷார்ட் ஹேண்ட், டைப் ரைட்டிங் கற்றுக்கொள்ள சித்தாப்பக்கள் அறிவுறுத்தினார்கள். மதுரை டிவிஎஸ் கம்பெனியில் வேலை கிடைத்தது. அதற்கு முன்னதாக, ஜவுளிக் கடையில் வேலை செய்தேன். காலை 8 மணிக்கு சென்றால் மாலை 6 மணி வரை வேலை. உணவு இடைவேளை என்பது 1 முதல் 2 மணி வரை வீட்டிற்குச் சென்றும் சாப்பிட்டு வரலாம். வீட்டுக்குப் போகாமல் வேலை பார்த்தால், ஜவுளிக் கடை உரிமையாளரே மதிய உணவும் வழங்குவார். 6 மணிக்கு மேல் 8 வரை கூடுதலாக வேலை செய்தால், கடைக்கு எதிரே உள்ள ஆரிய பவன் கடையில் பூரி, தோசை என ஏதாவது வாங்கித் தருவார் முதலாளி. அந்தக் காலத்தில் பூரி, தோசை என்பதே பெரிய விஷயம்!
அந்தக் காலம்... என்னைப் பொறுத்தவரை மிகவும் மகிழ்ச்சியான காலம். மதுரை பழங்காநத்தம் பகுதியில் நாங்கள் வசித்து வந்தோம். காலை 5 மணிக்கு எழுந்து கிணற்றில் நீர் இறைத்துக் குளித்துவிட்டு, அருகே உள்ள கோயிலின் பிள்ளையாரை வணங்கி விட்டுத்தான் என் வேலையைத் தொடங்குவேன். இது என் தினசரிப் பழக்கம்.
ஜவுளிக்கடை வேலைக்குப் பிறகு மதுரை டிவிஎஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு எனக்கு கிடைத்த முதல் மாத சம்பளம் 52 ரூபாய். அந்தநேரத்தில் இந்திய விமானப்படையில் ஆள் சேர்ப்பு விண்ணப்பம் வந்தது. நேர்முகத் தேர்வில் செலக்ட் ஆனேன். விமானப்படையில் வேலை கிடைத்தது. மதுரையில் இருந்து சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள பயிற்சி மையத்திற்கு செல்ல அறிவுறுத்தினார்கள். தாம்பரம் பயிற்சி மையத்தில், அன்றைய இரவே பெங்களூரூ செல்ல வேண்டும் என்று கூறிவிட்டார்கள். உடனடியாக அங்கிருந்து பெங்களூரு சென்றேன். அங்கு பயிற்சி முடிந்தது. முதல் முறையாக டெல்லியில் பணியாற்ற நியமிக்கப்பட்டேன். சென்னையில் இருந்து கிளம்பியது முதல் எனக்கு வாழ்க்கை மிகவும் பிரகாசமாகவே இருந்தது. 9 வருடங்கள் நான் டெல்லியில் வேலை செய்தேன்.
பொதுவாக 3 வருடங்களுக்கு ஒருமுறை பணி இடமாற்றம் இருக்கும். ஆனால், ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யும் இடத்திலேயே, அதாவது டிரான்ஸ்ஃபர் செக்ஷனிலேயே வேலை செய்ததால் அங்கேயே 5 வருடம் வேலை செய்தேன். ஒருநாள், என் மேலதிகாரி உடனடியாக பணியிட மாற்றம் பெறச் சொன்னார். தமிழகத்தில் இடமாற்றம் கேட்டேன். பார்க்காத இடங்களுக்கு செல்ல அட்வைஸ் செய்தார் அவர். ஜம்மு - காஷ்மீர் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்தார். அது 1971ம் ஆண்டு. அப்போது ஜம்மு - காஷ்மீர், பங்களாதேஷ் பகுதியில் போர் நடந்து கொண்டிருந்தது. போர் என்றால் என்ன என்பதை கண் முன்னே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் தேசப் பற்றில் ஒரு பிடிப்பு உண்டானது.
விமானப் படைப் பணி என்ற ஒன்று இல்லாவிட்டால் எனக்கு தமிழகத்தைத் தவிர்த்து வேறு ஒன்றுமே தெரிந்திருக்காது. விமானப் படையில் பணியாற்றியதுதான் எனக்குள் மாறா தேசப் பற்றைப் புகுத்தியது. அங்கே, பிற மொழி பேசக்கூடிய வீரர்களுடன் பழகும் சந்தர்ப்பம் அமைந்தது. அவர்கள் என்னை ‘மதராஸி’ என்று கூப்பிட்டாலும் அன்புடன் பழகுவார்கள். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யும் வீரர்களை பார்த்த பின்னரே எனக்கு தேசிய உணர்வு ஏற்பட்டது. இன்று வரை அந்த நாட்டு பற்று என்பது எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது."
திருமணம் எப்போது?
"அது நடந்தது பெரிய சுவாரஸ்யம். ஜம்மு - காஷ்மீரில் இருந்தபோது, நெல்லையில் உறவுக்காரப் பையனுக்கு திருமணம். கலந்துகொண்டேன். மாப்பிள்ளை ஹைதராபாத்தில் வேலை செய்தான். மணமக்கள் இருவரும் திருமணம் முடிந்ததும் ஹைதராபாத் சென்றுவிட்டார்கள். அவர்களுக்கான சீர் வரிசை பாத்திரங்கள் நெல்லையிலேயே இருந்தன. எனக்கு லீவு முடிந்தது. ‘போற வழில அப்படியே ஹைதராபாத்தில் சீர் வரிசைப் பாத்திரங்களை அவங்ககிட்ட கொடுத்துரு’ என்று உறவினர்கள் சொன்னார்கள். காஷ்மீர் எங்கேயோ இருக்கு, ஹைதராபாத் எங்கேயோ இருக்கு என்று நன் சொன்னதையெல்லாம் அவர்கள் புரிந்துகொள்ளவே இல்லை. ‘ஏலே... எல்லாம் வடக்குலதாம்ல இருக்கு’ என்று சொல்லி. பாத்திர மூட்டைகளைக் கொடுத்துவிட்டார்கள்.
வேறு வழி, ஹைதராபாத் சென்று இறங்கினேன். நான் மட்டும்தான் இறங்கினேன். ஒரு ஈ காக்காவைக் கூட காணோம். ஆமாம்... அப்போது தெலங்கானா போராட்டம் அங்கே உச்சத்தில் இருந்தது. 144 தடை உத்தரவும் போடப்பட்டிருந்ததால் பேருந்து, ஆட்டோ எதுவும் இயங்கவில்லை. ஹைதராபாத்தில் தனியாக நின்று கொண்டிருந்தேன். டெல்லியில் பணியிட மாறுதலின் போது ஹைதராபாத்திற்கு இடம் மாற்றம் பெற்றுத் தந்த ஒருவர் ஞாபகத்துக்கு வந்தார். அவரைத் தொடர்பு கொண்டதால், விமானப்படை துறையின் வாகனத்துடன் வந்து என்னை அழைத்துச் சென்றார். சீர் வரிசைப் பொருட்களை மணமக்கள் வீட்டில் ஒப்படைத்தேன். அப்போதுதான் என் உறவுக்காரப் பையன், என் அக்கா முறையில் உள்ள ஒருவருக்கு மகள் இருக்கிறார். அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் நீ மகிழ்ச்சியும் நிம்மதியுமாக இருப்பாய் என்று கூறினார்.
பிறகு, ஜம்முவுக்கு வந்துவிட்டேன். வேலையே ஓடவில்லை. அவன் சொன்ன பெண்ணைப் பற்றிய நினைப்பே ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. உடனே லீவு போட்டேன். அவருக்கு திருவனந்தபுரம் தான் ஊர். உறவினர்களைப் பார்க்கும் சாக்கில் அவரைப் பார்க்கச் சென்றேன். தனியே அவரிடம் பேசினேன். என் திருமண விருப்பத்தைக் கூறினேன். அவருக்கும் என்னைப் பிடித்துப்போனது. இருவரின் விருப்பத்தையும் இரண்டு வீட்டாரிடமும் சொன்னோம். பார்க்காமலேயே காதல்... பார்த்தபின் சம்மதம்... பிறகு குடும்பத்தார் சம்மதத்துடனும் ஆசியுடனும் ஜாம்ஜாமென்று நடந்தேறியது திருமணம். என் மனைவியின் பெயர் தங்கம். பேருக்கேத்த மாதிரியே குணம் கொண்டவள்."
நீங்கள் எப்படி நடிப்பு உலகத்திற்குள் வந்தீர்கள்?
"விமானப் படையில் இருந்தபோதே நடிக்கத் தொடங்கிவிட்டேன் என்றுதான் சொல்லவேண்டும். பாகிஸ்தான் போரில் காயமடைந்த வீரர்கள் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்கள். முப்படையின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் அவர்களுக்காக நடக்கும். ஒருநாள் பஞ்சாபி, மறுநாள் மலையாளி என ஒவ்வொருநாளும் நாங்களாக குழுவாக இருந்து நாடகம் போடுவோம். நடித்தும் ஆடியும் பாடியும் காட்டுவோம். மொழி புரியாவிட்டாலும் ரசித்துச் சிரிப்பார்கள். சிரித்து மகிழ்வார்கள். ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய நபர் வராததால் நான் நடிக்க வேண்டியதாகி விட்டது. நான் நடிப்பது அதுதான் முதல்முறை. பெரிதாக நாடகங்கள் பார்க்காத நிலையில், உயர் அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் நடித்தேன். நிறையபேர் பாராட்டினார்கள். அங்கிருந்தான் என் நடிப்புப் பயணம் ‘டேக் ஆஃப்’ ஆனது. பிறகு, டெல்லியில் அதிக நாடகங்களில் நடிக்க அரம்பித்தேன்.
நாடகக் குழுவில் இணைந்தேன். நடிகர் சோ, மேஜர் சுந்தரராஜன் அவர்களிடம் அனுமதி பெற்று அவர்கள் நாடகங்களை டெல்லியில் நடத்தினோம். என் நடிப்புக்கு தனி வரவேற்பு இருந்தது. பத்திரிகைகளும் பாராட்டின!
இந்த சமயத்தில்தான் சென்னைக்கு வந்தேன். விமானப் படை வேலையை விட்டுவிட்டு, தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து, அந்த வேலையையும் விட்டுவிட்டு சென்னைக்கு வந்த எனக்கு ‘என்ஃபீல்டு’ கம்பெனியில் வேலை கிடைத்தது. நான் டெல்லியில் இருந்து எப்போதோ வந்துவிட்டாலும், சென்னைவாசியாகி விட்டாலும் ‘டெல்லி’ என்பது என் பெயருக்கு முன்னே ஒட்டிக்கொண்டே இருக்கிறது.
சென்னையில் மயிலாப்பூர் பகுதியில் குடியிருந்தேன். அப்போதுதான் காத்தாடி ராமமூர்த்தியின் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன். இது... என் வாழ்வில் அடுத்தக்கட்ட திருப்புமுனையாக அமைந்தது."
- தொடரும்
வீடியோ பேட்டியைக் காண...