‘காத்துவாக்குல’ பறந்த கண்ணியம்: ஆண்-பெண் உறவைக் கையாள்வதில் முன்னுதாரண ‘விசித்திரன்’

‘காத்துவாக்குல’ பறந்த கண்ணியம்: ஆண்-பெண் உறவைக் கையாள்வதில் முன்னுதாரண ‘விசித்திரன்’
Updated on
2 min read

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தைவிட எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியாகியிருக்கும் ‘விசித்திரன்’ கண்ணியமாகவும் நவீனச் சிந்தனையைப் பிரதிபலிக்கும் வகையிலும் ஆண் - பெண் உறவைக் கையாண்டுள்ளது.

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நாயகன் ராம்போ (விஜய் சேதுபதி) கண்மணியையும் (நயன்தாரா), கதீஜாவையும் (சமந்தா) காதலிக்கிறான். அவன் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களைக் காதலித்திருக்கும் உண்மை தெரிந்த பிறகும் கண்மணியும் கதீஜாவும் ராம்போவுக்காகப் போட்டி போடுகின்றனர். இன்னொரு பெண்ணைக் காதலிப்பதை ராம்போ தங்களிடம் திட்டமிட்டு மறைத்திருக்கிறான் என்று தெரிந்த பிறகு அவன் மீது கோபம்கொள்கிறார்களே தவிர, இருவருமே அவன் மீதான காதலைக் கைவிடவில்லை.

பிறப்பிலிருந்தே துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படுகிறவனாக ராம்போ கதாபாத்திரத்தை வடிவமைத்து அவனுடைய ‘இரட்டைக் காத’லுக்கு நியாயம் கற்பிக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். ஆனால், எவ்வளவு அன்புமிக்க நம்பிக்கைக்குரிய வாழ்க்கைத் துணை இருந்தாலும் இன்னொரு பெண்ணை நாடும் ஆண்களின் வேட்கையை நியாயப்படுத்தும் திரைப்படமாகவே ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ அமைந்துள்ளது.

பாலியல் உறவு, திருமணம் ஆகிய விஷயங்களில் ஆண்களுக்கு நம்மைப் போன்ற தந்தைவழி ஆண்மையச் சமூகங்கள் வழங்கியிருக்கும் பக்கச்சார்பு மிக்க சலுகைகளையும் அதிகாரத்தையும் கொண்டாடுவதாகவும் அமைந்துள்ளது. அதேபோல் தன்னைத் தவிர இன்னொரு பெண்ணை நேசித்திருக்கும் ஆணைப் பிரிய மனமில்லாதவர்கள்போல் உலகத்தில் வேறு ஆணே இல்லாததுபோல் சுயசார்புடைய நவீனப் பெண்கள் இருவரைச் சித்தரித்திருப்பது பெண்களின் சுயமரியாதை, விருப்பத் தேர்வு ஆகியவை குறித்து இயக்குநருக்கு இருக்கும் மோசமான புரிதலை வெளிப்படுத்துகிறது.

நாயகனுக்காகப் போட்டிபோடும் இரண்டு பெண்களும் பாலியல் உறவையும் திருமணத்தையும் ஒப்பிட்டு, அவற்றில் எது முக்கியமானது என்று விவாதிப்பது விடலைத்தனத்தையும் கடந்து ஆபாசத்தின் எல்லையைத் தொடுகிறது. இதே போன்ற காட்சிகளில் ராம்போவின் இடத்தில் ஒரு பெண்ணையும் கண்மணி, கதீஜாவுக்குப் பதிலாக இரண்டு ஆண்களும் இருந்தால் அது ஆபாசப் படம் என்றும் கலாச்சார சீர்கேடு என்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கும். தடை செய்யப்பட்டிருந்தாலும் ஆச்சரியமில்லை.

இந்தப் பின்னணியில்தான் ‘விசித்திரன்’ திரைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. ஆண்கள் இரண்டு மனைவியருடன் வாழ்வதை இயல்பாகக் காண்பித்துவந்த தமிழ் சினிமா, பெண்கள் கணவரைப் பிரிந்து வேறோரு துணையை நாடுவதைப் பெரும்பாலும் பிரச்சினைக்குரியதாகவே சித்தரித்துவந்துள்ளது.

அந்த வழக்கத்தை உடைத்து ஒரு பெண், இரண்டாவது கணவருடன் நிம்மதியான மணவாழ்வில் இருக்கும் அதே நேரத்தில் முன்னாள் கணவனுடனும் கண்ணியமான நட்பைத் தொடர்வதாகக் காண்பித்திருப்பது வெகுஜனத் திரைப்படங்களில் ஆண்-பெண் உறவைக் கையாள்வதில் பெரிதும் வரவேற்கத்தக்க முன்னேற்றம். மலையாளப் படத்தையும் தமிழ் மறு ஆக்கத்தையும் இயக்கியிருக்கும் எம்.பத்மகுமார் தமிழ் ரசனைக்கான சமரசமாக எந்த மாற்றத்தையும் செய்யாததற்கு அவரைப் பாராட்டலாம்.

> இது, ச.கோபாலகிருஷ்ணன் எழுதிய 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in