

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ஆர்.கே.சுரேஷ், பூர்ணா, பகவதி பெருமாள் நடித்துள்ள ‘விசித்திரன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்த வெள்ளிக்கிழமைகளில் திரையரங்குகளில் வெளி யாகின. இரண்டு படங்களின் கதைகளிலுமே ஒரு முதன்மைக் கதாபாத்திரம் ஒன்றுக்கு மேற்பட்ட துணையைக் கொண்டிருப்பதாகக் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் பெரும் விளம்பரங்களுடன் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தைவிட எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியாகி யிருக்கும் ‘விசித்திரன்’ கண்ணியமாகவும் நவீனச் சிந்தனையைப் பிரதிபலிக்கும் வகையிலும் ஆண் - பெண் உறவைக் கையாண்டுள்ளது.
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நாயகன் ராம்போ (விஜய் சேதுபதி) கண்மணியையும் (நயன்தாரா), கதீஜாவையும் (சமந்தா) காதலிக்கிறான். அவன் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களைக் காதலித்திருக்கும் உண்மை தெரிந்த பிறகும் கண்மணியும் கதீஜாவும் ராம்போவுக்காகப் போட்டி போடுகின்றனர். இன்னொரு பெண்ணைக் காதலிப்பதை ராம்போ தங்களிடம் திட்டமிட்டு மறைத்திருக்கிறான் என்று தெரிந்த பிறகு அவன் மீது கோபம்கொள்கிறார்களே தவிர, இருவருமே அவன் மீதான காதலைக் கைவிடவில்லை.
மோசமான சித்தரிப்பு
பிறப்பிலிருந்தே துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படுகிறவனாக ராம்போ கதாபாத்திரத்தை வடிவமைத்து அவனுடைய ‘இரட்டைக் காத’லுக்கு நியாயம் கற்பிக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். ஆனால், எவ்வளவு அன்புமிக்க நம்பிக்கைக்குரிய வாழ்க்கைத் துணை இருந்தாலும் இன்னொரு பெண்ணை நாடும் ஆண்களின் வேட்கையை நியாயப்படுத்தும் திரைப்படமாகவே ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ அமைந்துள்ளது. பாலியல் உறவு, திருமணம் ஆகிய விஷயங்களில் ஆண்களுக்கு நம்மைப் போன்ற தந்தைவழி ஆண்மையச் சமூகங்கள் வழங்கியிருக்கும் பக்கச்சார்பு மிக்க சலுகைகளையும் அதிகாரத்தையும் கொண்டாடுவதாகவும் அமைந்துள்ளது. அதேபோல் தன்னைத் தவிர இன்னொரு பெண்ணை நேசித்திருக்கும் ஆணைப் பிரிய மனமில்லாதவர்கள்போல் உலகத்தில் வேறு ஆணே இல்லாததுபோல் சுயசார்புடைய நவீனப் பெண்கள் இருவரைச் சித்தரித்திருப்பது பெண்களின் சுயமரியாதை, விருப்பத் தேர்வு ஆகியவை குறித்து இயக்குநருக்கு இருக்கும் மோசமான புரிதலை வெளிப்படுத்துகிறது.
இதுதான் நகைச்சுவையா?
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட துணையை நாடும் விருப்பம்கொண்டோரைப் பற்றித் திரைப்படம் எடுக்கக் கூடாது என்பதில்லை. அப்படி வாழ்வது சரியா தவறா என்பது தனி விவாதம். அப்படி வாழ்கிறவர்களும் நம் சமூகத்தில் இருக்கிறார்கள் என்னும்போது அவர்களைப் பற்றி, அவர்களின் உளவியலைப் பற்றிய திரைப்படங்களும் வர வேண்டும். வெகுஜனப் படைப்புகளில் இத்தகைய விஷயங்களை பக்குவத்துடனும் முதிர்ச்சியுடனும் கையாள வேண்டும். ஆனால், இந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் கலகலப்பு, நகைச்சுவை போன்றவற்றின் பெயரில் விடலைத்தனமான காட்சிகளுக்காகவே ஓர் ஆண் இரண்டு பெண்களைக் காதலிப்பது என்னும் விஷயத்தைக் கையிலெடுத்திருப்பதாகத் தெரிகிறது. ராம்போ இரண்டு பெண்களுடன் கைகளைக் கோத்துக்கொள்வது, பேருந்தில் நெருக்கமாக நின்றுகொண்டு பயணிப்பது, ‘டைட்டானிக்’ ஜாக்கைப் போல் இரண்டு ரோஸ்களுடன் கப்பலின் நுனியில் கைகளை விரித்துக்கொண்டு நிற்பது உள்ளிட்ட காட்சிகளில் தியேட்டரில் விசில் சத்தமும் கைதட்டல்களும் காதைப் பிளக்கின்றன. நாயகனுக்காகப் போட்டிபோடும் இரண்டு பெண்களும் பாலியல் உறவையும் திருமணத்தையும் ஒப்பிட்டு, அவற்றில் எது முக்கியமானது என்று விவாதிப்பது விடலைத்தனத்தையும் கடந்து ஆபாசத்தின் எல்லையைத் தொடுகிறது. இதே போன்ற காட்சிகளில் ராம்போவின் இடத்தில் ஒரு பெண்ணையும் கண்மணி, கதீஜாவுக்குப் பதிலாக இரண்டு ஆண்களும் இருந்தால் அது ஆபாசப் படம் என்றும் கலாச்சார சீர்கேடு என்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கும். தடை செய்யப்பட்டிருந்தாலும் ஆச்சரியமில்லை.
வரவேற்கத்தக்க முன்னேற்றம்
இந்தப் பின்னணியில்தான் ‘விசித்திரன்’ திரைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. 2018இல் வெளியான மலையாளப் படம் ‘ஜோசப்’. அதன் தமிழ் மறுஆக்கம்தான் ‘விசித்திரன்’. இந்தப் படத்தின் நாயகனான மாயனின் (ஆர்.கே.சுரேஷ்) மனைவி ஸ்டெல்லா (பூர்ணா) கணவனைப் பிரிந்து பீட்டர் (பகவதி பெருமாள்) என்பவரைத் திருமணம் செய்துகொள்கிறார். ஆனால், அதற்குப் பிறகும் மாயனும் ஸ்டெல்லாவும் நண்பர்களாக இருக்கிறார்கள். தம் ஒரே மகள் தொடர்பான முடிவுகளை இருவரும் சேர்ந்தே எடுக்கிறார்கள். மேலும், மாயனுக்குப் பிறந்த மகள் தன் அம்மாவான ஸ்டெல்லாவுடன் பீட்டர் வீட்டில் வந்து வசிக்கிறாள். மாயனுக்கும் ஸ்டெல்லாவுக்குமான நட்பைத் தவறாக எண்ணாததோடு மாயனையும் அவனுக்கும் ஸ்டெல்லாவுக்கும் பிறந்த மகளையும் கனிவுடன் அணுகுகிறான் பீட்டர். தமிழ் சினிமாவில் ஒரு பெண் கணவனைப் பிரிந்து இன்னொருவரைத் திருமணம் செய்துகொள்வது போன்ற கதையில் பெரும்பாலும் அந்தப் பெண் மிகக் கொடியவராக சித்தரிக்கப்படுவார். அல்லது அவருடைய இரண்டாம் கணவர் தீயவராக இருப்பார். அல்லது இரண்டாம் திருமணத்தின் மூலமாக அந்தப் பெண்ணுக்கோ அவளுடைய குழந்தைகளுக்கோ ஏதேனும் தீங்கு விளையும். ஆண்கள் இரண்டு மனைவியருடன் வாழ்வதை இயல்பாகக் காண்பித்துவந்த தமிழ் சினிமா, பெண்கள் கணவரைப் பிரிந்து வேறோரு துணையை நாடுவதைப் பெரும்பாலும் பிரச்சினைக்குரியதாகவே சித்தரித்துவந்துள்ளது. அந்த வழக்கத்தை உடைத்து ஒரு பெண், இரண்டாவது கணவருடன் நிம்மதியான மணவாழ்வில் இருக்கும் அதே நேரத்தில் முன்னாள் கணவனுடனும் கண்ணியமான நட்பைத் தொடர்வதாகக் காண்பித்திருப்பது வெகுஜனத் திரைப்படங்களில் ஆண்-பெண் உறவைக் கையாள்வதில் பெரிதும் வரவேற்கத்தக்க முன்னேற்றம். மலையாளப் படத்தையும் தமிழ் மறு ஆக்கத்தையும் இயக்கியிருக்கும் எம்.பத்மகுமார் தமிழ் ரசனைக்கான சமரசமாக எந்த மாற்றத்தையும் செய்யாததற்கு அவரைப் பாராட்டலாம்.
தமிழில் ஆண்-பெண் உறவைக் கையாளும் திரைப்படங்கள் விடலைத்தனமாகவும் நகைச்சுவை என்னும் பெயரில் பிற்போக்கு விழுமியங்களை உயர்த்திப் பிடிக்கும் வகையிலேயே வந்துகொண்டிருக்கின்றன. மலையாளத் திரைப்படங்களில் ‘ஜோசப்’ போன்ற படங்களும் அவற்றுக்குக் கிடைக்கும் வரவேற்பும் மலையாளப் படைப்பாளிகள் மட்டுமல்லாமல் மக்களிடமும் நவீனத்துவ சிந்தனை பரவலாகி யிருப்பதை உணர்த்துகின்றன. எந்தப் பாலினத்தையும் மலினப்படுத்தாமல் தரமான வெகுஜன திரைப்படங்களை இயக்க நாம் இன்றும் திணறிக் கொண்டிருப்பது நம் சமூகப் புரிதல் இன்னும் மேம்பட வேண்டும் என்பதைத்தான் காட்டுகிறது.