Published : 18 Apr 2022 04:35 PM
Last Updated : 18 Apr 2022 04:35 PM

கோலிவுட் அப்டேட்ஸ்: பக்தையாக பிந்து மாதவி, அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த்

தயாரிப்பாளர் கே.முருகன், எம்.எஸ். மூவீஸ் சார்பில் தயாரிக்கும் படம் ‘நாகா’. இதில், நாக அம்மன் பக்தையாக பிந்து மாதவி நடிக்கிறார். ரைசாவில்சன், ஸ்ரீகாந்த், கருணாகரன் உட்பட பலர் நடிக்கின்றனர். சார்லஸ் இயக்குகிறார். நாகை பகுதிகளை உள்ளடக்கிய கடலோரப் பகுதியில் தொன்மையான நாகநாடு இருந்தது. அதற்கும், நாகராஜா கோயில்களுக்கும், புராணங்களில் உள்ள நாகலோகத்துக்குமான தொடர்பை வைத்து பின்னப்பட்ட கதை. ஒரு சமூகப் பிரச்சினையையும் இது அழுத்தமாக பதிவு செய்கிறது என்கிறது படக்குழு.

சல்மான் படத்தில் தேவி ஸ்ரீபிரசாத்

தமிழ், தெலுங்கு படங்களுக்கு இசையமைத்து வரும் தேவி ஸ்ரீபிரசாத், முதல்முறையாக இந்திக்கு செல்கிறார். தெலுங்கில் ஹிட்டான தேவி ஸ்ரீபிரசாத்தின் சில ட்யூன்களை, தனது படத்தில் பயன்படுத்தியுள்ள நடிகர் சல்மான் கான், இப்போது தனது ‘கபி ஈத் கபி தீவாளி’ படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை அவரிடம் கொடுத்திருக்கிறார். இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். தெலுங்கு ஹீரோ வெங்கடேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு அனலரசு சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த்

விஜய் சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ படங்களை இயக்கியவர் எஸ்.யு.அருண்குமார். இவர் தற்போது சித்தார்த் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜில் ஜங் ஜக்’, ‘அவள்’ ஆகிய படங்களை தயாரித்த இடாகி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ‘தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படம் சிறந்த கிளாஸிக் சினிமாவாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பழநியில் தற்போது இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

வேண்டாம் கலவரம்!

என்.வி.நிர்மல்குமார் தற்போது சசிகுமார் நடிக்கும் ‘நா நா’ படத்தை இயக்கி வருகிறார். இவர் அடுத்து இயக்கும் படத்துக்கு ‘அல்லா மாலிக்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை வி ட்ரீம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கணேஷ் சந்திரா, ரமேஷ் பி ஒளிப்பதிவு. கவாஸ்கர் அவினாஷ் இசை. இதன் டைட்டில் டீஸரை, தயாரிப்பாளர் தாணு வெளியிட்டார். மதக் கலவரங்கள் கூடாது என்பதை மையப்படுத்தி இப்படம் உருவாவதாக படக்குழு கூறுகிறது.

ஜூனில் ‘மாயோன்’

அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி, டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள படம் ‘மாயோன்’. இப்படத்தில் சிபி ராஜ், தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைத்துள்ளார். பார்வைத் திறன் இல்லாத மாற்றுத் திறனாளிகளும் முழுமையாக திரைப்பட அனுபவத்தை உணரும் வகையில் உருவாக்கப்பட்டு இருப்பது இப்படத்தின் சிறப்பம்சம் என்கிறது படக்குழு. படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தான்யா ரவிச்சந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x