

"இந்தியா மாதிரியான சமூகத்தில் நீங்கள் முஸ்லிம்களை மீண்டும் மீண்டும் தீவிரவாதிகளாக காண்பித்துக் கொண்டிருக்கிறீர்கள்... இன்னும் எத்தனை நாட்கள்தான் இவ்வாறு காண்பிப்பீர்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால், இந்திய அரசியலே இஸ்லாமிய வெறுப்பை நோக்கிதான் உள்ளது. விஜய்க்கு ஒரு பெரிய மாஸ் உள்ளது. ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவர் சொல்வதை ஒரு பெரிய கூட்டம் நம்பிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க, விஜய் பொறுப்புணர்வோடு இருந்திருக்க வேண்டும்..." - 'பீஸ்ட்' பட முதல் காட்சியைப் பார்த்தபின் விஜய் ரசிகர் பதிவு செய்த ஆதங்கம் இது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரித்துவாரில் தரம் சன்கத் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பேசிய இந்து மதத் தலைவர்கள், 'முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்கள் ஆயுதம் ஏந்திப் போராட்டம் நடத்த வேண்டும்' என்று கோஷமிட்டனர். இது தொடர்பான வழக்கில் இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்த 'நிலை அறிக்கை'யை விரைவில் தாக்கல் செய்ய உத்தராகண்ட் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளது. இது ஓர் உதாரணம். கர்நாடகாவில் ஹிஜாப் பிர்ச்சினையின் பின்னணி அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பாலிவுட்டில் சமீபத்தில் வெளியான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' ஏற்படுத்திய தாக்கமும் அறிவோம். இந்தச் சூழலில்தான், 'பீஸ்ட்' என்னும் மாஸ் சினிமாவில் இஸ்லாமியர்களைக் காட்டிய விதம் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது. சமூக ரீதியில் இப்படம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து விஜய் ரசிகர்கள் இருவரிடம் பேசினோம்.
செய்யது ஜலாலூத்தீன் ரூமி: "என்னுடைய பள்ளிப் பருவத்திலிருந்தே நான் விஜய்யின் ரசிகன். ஒவ்வொரு படத்தின் ரிலீஸின்போதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் படம் பார்க்கச் சென்றுவிடுவேன். `பீஸ்ட்` படம் ரிலீஸான அன்றும் அதே மகிழ்ச்சியுடன் திரையரங்கிற்கு சென்ற எனக்கு முதல் காட்சியே என் மகிழ்ச்சியை மெல்ல விரட்டியது. அதன்பிறகு படம் முழுவதும் எனக்குத் தயக்கமும், தர்ம சங்கடமுமாகத்தான் இருந்தது. இதை எல்லாம் விஜய் உணர்வாரா..?
நான் மட்டுமல்ல, தியேட்டரில் உள்ள அனைவருமே தர்மசங்கடத்தில்தான் அமர்ந்திருந்தனர். படத்தில் என்னப் பிரச்சினை என்று கேட்கிறீர்களா? ஒரு மாலினை தீவிரவாதிகள் கைப்பற்றுகிறார்கள். தீவிரவாதிகள் என்றாலே இந்தியாவைப் பொறுத்தவரை முஸ்லிம்கள்தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதானே. அதன்படியே இப்படத்திலும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மால் ஒன்றினைத் தங்களதுக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வருகிறார்கள். அவர்கள் மாலினை விடுவிக்க வேண்டுமென்றால், இந்திய அரசால் கைது செய்துப்பட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாத தலைவர் ஒருவரை விடுவிக்க வேண்டும் என்ற வழக்கமான கோரிக்கையை முன்வைக்கிறார்கள். இதனை முறியடித்து எப்படி மாலினை விஜய் மீட்கிறார் என்பதுதான் படத்தின் ஒன்லைன் கதை.
ஒரு முஸ்லிமாகவும், விஜய்யின் ரசிகனாகவும் படத்தின் பல காட்சிகள் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கின. அதற்குக் காரணம், தற்போதைய காலக்கட்டத்தில் இந்தியா அதன் பெரும்பான்மை மக்களுக்கு எதனை எடுத்துக் கூறிக் கொண்டிருக்கிறது என்பதை பற்றியது. சமீப ஆண்டுகளாக முஸ்லிம்கள் என்றாலே, அவர்கள் தீவிரவாதிகள் என்று பொது சமூகத்தில் தொடர்ச்சியாக வெறுப்புடன் பதிவு செய்யப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பரவலாக சிறும்பான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்கள் தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களது உணவு, உடை, நாட்டுப்பற்று என அனைத்தும் கேள்விக்குட்படுத்தப்படுகிறது. இவ்வாறான சூழலில் தமிழகம் மட்டும்தான் இதற்கு சரியான எதிர்வினை ஆற்றி வருகிறது. ஆளும் கட்சியும், இங்குள்ள மக்களும் சிறுபான்மையினர் பக்கத்தில் நிற்கிறார்கள்.
வெகுஜன மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஜய்யும் முஸ்லிம்களை மீண்டும் தீவிரவாதிகளாக முன் நிறுத்துவது எனக்குப் பெருத்த அதிர்ச்சியைத் தருகிறது. `துப்பாக்கி` படத்திலும் இதனைத்தான் நான் உணர்ந்தேன். `தி காஷ்மீர் ஃபைல்ஸ்` போன்ற படங்கள் பாலிவுட்டிலிருந்து வருவது அதிர்ச்சி அல்ல. ஏனென்றால், பாலிவுட் பல நேரங்களில் இந்துத்துவா பக்கம்தான் நின்றிருக்கிறது. ஆனால், தமிழகம் மாற்றான கருத்தியல் தளத்தில் இருக்கிறது. இங்கு மதத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது. அவ்வாறான சூழலில் இம்மாதிரியான படம் வருகிறது என்றால், அதனை நிச்சயமாக எளிதாக கடந்து போக முடியவில்லை.
`தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ எம்மாதிரியான பாதிப்புகளை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தியதோ, அதே பாதிப்பைத்தான் `பீஸ்ட்’ படமும் ஏற்படுத்தி இருக்கிறது. முஸ்லிம்களை விமர்சிக்க கூடாதா? அவர்களைத் திரைப்படங்களில் எதிர்மறையாக காட்டவே கூடாதா? ஏன் படத்தை சீரியஸாக எடுக்கிறீர்கள்? - இப்படி சிலர் கேள்வி கேட்கிறார்கள். இதனை அப்படி அணுகக் கூடாது என்பதுதான் அவர்களுக்கான என் பதில். தீவிரவாதம் நிச்சயம் எளிதாக கடந்துபோக கூடியது கிடையாது. தீவிரவாதம் என்பது நிச்சயம் விமர்சிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அதனை நாம் எப்படி பேசப் போகிறோம் என்று இருக்கிறது அல்லவா? அதுதானே நம்மை நாகரிக சமூகமாகக் காட்டும். அதைத்தான் நான் பேசுகிறேன்.
அதை விடுத்து தீவிரவாதிகளைக் காட்டுவதாக ஒரு குறிப்பிட்டச் சமூகத்தை களங்கப்படுத்துவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? படத்தை பார்த்த அனைத்து முஸ்லிம்களுக்கும் இப்படம் நிச்சயம் நெருடலைக் கொடுத்திருக்கும். ஏன் என்னுடன் அமர்ந்து படம் பார்ந்த என் இந்து நண்பர்களும் இதனைத்தான் உணர்ந்தார்கள். அவர்களால் என்னை அருகில் அமரவைத்து என் சமூகத்தை எதிர்மறையாக காட்டுவதை எப்படி ரசிக்க முடியும்? அவர்களால் எப்படி அதைக் கொண்டாட முடியும். நிறைய ரசிகர்களை கொண்ட விஜய் நிச்சயம் இதில் பொறுப்புணர்வோடு இருந்திருக்க வேண்டும். தமிழக அரசியலை சற்றும் உள்வாங்காமல் ஒரு குடுவைக்குள் உட்கார்ந்துக்கொண்டு நெல்சனும், விஜய்யும் இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார்கள்.
இறுதியாக, உங்கள் ரசிகனாக கூறுகிறேன்... தளபதி, ஆரோக்கியமான ஆர்மோனியத்தை உண்டாக்க கூடிய இடத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உங்களை அமரவைத்துள்ளார்கள். நீங்கள் கமர்ஷியல் படத்தை கொடுத்தாலும், சமூக பொறுப்புணர்வோடு கொடுக்க வேண்டிய கடமை உள்ளது” என்றார்.
டில்லிபாபு துரைவேலன்: "கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சினை எழுந்தபோதுதான் தளபதியின் `அரபிக் குத்து` பாடல் வெளியானது. ஹிஜாப் எதிர்ப்புக்கு எதிர்வினையாகவே இப்பாடலை நாங்கள் தூக்கிப் பிடித்தோம். படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. எனக்கு தனிப்பட்ட முறையில் படம் பிடித்திருந்தது. ஆனால், அதில் கூறப்பட்ட மறைமுக இஸ்லாமிய வெறுப்பை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அரபு நாடுகளில் தொடர்ந்து பணி செய்வதால், ஓர் இந்திய முஸ்லிம் இப்படத்தை பார்த்தால் என்ன உணர்வார் என்பதை என்னால் உணர முடிந்தது. அதுதானே மனிதம்.
`துப்பாக்கி` படத்தின்போதே இம்மாதிரியான பிரச்சினை எழுந்தது. விஜய் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதை நினைத்து நிச்சயம் ஏமாற்றம்தான். மதம் கடந்த ரசிக பட்டாளம் விஜய்யிக்கு உள்ளது. உள்நோக்கத்துடன் இப்படத்தில் முஸ்லிம்கள் மீண்டும் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள் என்று நான் கருதவில்லை. ஏனென்றால் இது தமிழ்நாடு. இங்கு அரசியல் களம் வேறு. ஆனால், ஒரு பெரிய நடிகர் நிச்சயம் இதில் கவனத்துடன் இருந்திருக்க வேண்டும் என்பது என் விருப்பம். கடந்த 8 வருடங்களில் இந்தியா நிறைய மாறி இருக்கிறது. அது விஜய்க்கும் தெரிந்திருக்கும் அல்லவா?
சில மாதங்களுக்கு முன் வெளியான `மாநாடு` படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அத்தகைய களம்தான் தமிழ் சினிமாவுக்கு வேண்டும். ஏன்... இந்தியாவுக்குமே அதுதான் வேண்டும். உங்களுக்கு இதில் உடன்பாடில்லையா... சரி, வடக்கில் மதத்தின் பெயரில் நடக்கும் வன்முறைகளைத் திரைப்படமாக எடுங்கள். அதை விட்டுவிட்டு மீண்டும் இந்தியா - பாகிஸ்தான், ஐஎஸ் தீவிரவாதிகள், காஷ்மீர் பிரிவினைவாதிகள் என்று திரும்பத் திரும்ப அதனையே எடுப்பதை தவிர்க்கலாம். அந்தக் காலம் சென்றுவிட்டது” என்றார்.
'புதுக்கோட்டை ராணுவ பயிற்சி மையத்தில் குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்தது குறித்து தனது வருத்ததை விஜய் தனது சமீபத்திய பேட்டியில் பதிவு செய்திருந்தார். அந்தப் பேட்டியில் தற்போது சமூகத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளைக் கவனித்து வருவதாக அவர் கூறியிருந்தார். அவ்வாறு இருக்கையில், பள்ளிகளில் ஹிஜாப் கூடாது... ஹலால் உணவுகள் கூடாது... மசூதிகளில் ஸ்பீக்கர்கள் கூடாது... -என நமது பக்கத்து மாநிலமான கர்நாடகா எந்தக் குரலில் பேசுகிறது என்பதை விஜய் அறிந்திருக்கிறாரா?
அறிந்திருந்தால், நிச்சயம் இந்த மாதிரியான கதைக் களத்தை தேர்வு செய்திருக்க மாட்டார். இனியாவது அறியட்டும்...' என்கின்றனர் சினிமா ஆர்வலர்கள்.
தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in