

“நான் தேவாலயங்களுக்கு மட்டும் போகவில்லை. பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் சென்றிருக்கிறேன். கடப்பாவில் உள்ள தர்காவுக்கும் சென்றிருக்கிறேன். அங்கும் எனக்கு ஆன்மிக அனுபவம் கிடைத்திருக்கிறது” என்கிறார் நடிகர் விஜய். 'தளபதி'-யில் இருந்து 'தலைவன்' மாறும் எண்ண ஓட்டம் குறித்த கேள்விக்கும் பதிலளித்திருக்கிறார்.
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் வரும் 13-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனையொட்டி நடிகர் விஜய் உடன் சிறப்பு நேர்காணல் கண்டார் இயக்குநர் நெல்சன். சன் டிவியில் ஒளிபரப்பான இந்த நேர்காணலில் விஜய் அளித்த பதில்கள்...
ஏன் பத்து வருடங்களாக பத்திரிகையை சந்தித்து பேட்டி வழங்கவில்லை?
"10 வருடங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்வு நடந்தது. நான் கூறியதை வேறு விதமாக பத்திரிகையில் எழுதியதால் நான் கூறிய அர்த்தம் வேற விதத்தில் மக்களிடம் சென்றுவிட்டது. இதனைத் தொடர்ந்து சில காலம் பேட்டியளிக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். அப்படியே பத்து வருடம் ஓடிவிட்டது. பேட்டியளிக்காததன் காரணமாகவே நான் பேச நினைத்தது எல்லாம் படத்தின் ஆடியோ நிகழ்வில் பேசி விடுகிறேன்."
'பீஸ்ட்' படம் அனுபவம்? படம் எப்படி வந்துள்ளது...
"படம் வந்தால்தான் தெரியும். என் படத்தை பற்றி நானே என்ன சொல்வது என்று தெரியவில்லை. எல்லா படமும் நன்றாக வரவேண்டும் என்றுதான் நினைக்கிறோம். அதில் சில படங்கள் வரவேற்பு பெறுகிறது. சில படங்கள் வரவேற்பு பெறுவதில்லை. நான் கதை கேட்கும்போது நான் கவனித்தது எல்லாம் படத்தில் வந்துள்ளதா என்று கவனிப்பேன். அதுதவிர படம் எப்படி வந்துள்ளது என்று கேட்டால் எனக்கே சொல்ல தெரியாது.
புதியவர்கள் படத்தை பார்த்து கூறினால்தான் நமக்கே படம் எப்படி வந்துள்ளது என்று தெரியும். நெல்சன்... ஆனால் நீங்கள் மிகத் தெளிவான இயக்குநர். இதனை நான் சில இயக்குநர்களிடம் பார்த்திருக்கிறேன். அது உங்களிடம் உள்ளது."
படத்தின் கதாநாயகி பூஜாவை பற்றி?
"படத்தை பார்த்த அனைவரும் படத்தில் எங்கள் ஜோடி நல்லா இருக்கிறது என்று கூறினார்கள். படத்தில் அவங்களுடைய பணியை சிறப்பாக செய்திருக்கிறார். தமிழ் வசனங்களை கற்றுக்கொள்வதில் அதிக கவனம் எடுத்துக்கொண்டார். அவை எல்லாம் நிச்சயம் பாராட்டப்படக் கூடியவை."
இசையமைப்பாளர் அனிருத் பற்றி?
"அனிருத் தனது திரைத் துறையின் உச்சியில் இருக்கிறார். அவர் தொட்டதெல்லாம் பொன்னாகிறது. அனிருத்திடம் மிகவும் பிடித்தது, அவர் ஆச்சரியம் அளித்துக்கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு பாட்டுக்கும் உழைத்துக்கொண்டே இருக்கிறார்."
உங்களது உணர்ச்சிகளுக்கு (கோபம், மகிழ்ச்சி) எந்த அளவுகோல் வைத்துள்ளீர்கள்?
"50 -50% வைத்துள்ளேன். எனக்கு கோபம் வராது என்றெல்லாம் கூற முடியாது. கோபம் வரும். எனினும் நான் பெரும்பாலும் ரியாக்ட் செய்வதில்லை. அமைதி ஆகிவிடுவேன். நமக்கு இருப்பது ஒரு லைஃப்தான்... அதனை நினைவில்கொண்டு அனைத்தையும் எளிமையாக அணுகுவோம்."
கடவுள் நம்பிக்கை இயல்பிலேயே அதிகமா? கடவுள் நம்பிக்கை இருக்கா?
"நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்தான். ஆன்மிகம் சார்ந்த இடங்களுக்கு செல்லும்போது நல்ல அனுபவம் கிடைக்கும். நான் தேவாலயங்களுக்கு மட்டும் போகவில்லை. பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் சென்றிருக்கிறேன். கடப்பாவில் உள்ள தர்காவுக்கும் சென்றிருக்கிறேன். அங்கும் எனக்கு ஆன்மிக அனுபவம் கிடைத்திருக்கிறது. என் அம்மா இந்து, அப்பா கிறிஸ்தவர்... என்னை இந்தக் கடவுளைதான் கும்பிட வேண்டும், இங்குதான் செல்ல வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தியது இல்லை. அதனைதான் நான் என் குழந்தைகளுக்கும் கூறுகிறேன்."
அப்பா பற்றி?
"அப்பாக்கள் ஒரு குடும்பத்தின் வேர்கள். அப்பாக்கும் கடவுளுக்கும் இருக்கும் ஒரு வித்தியாசம், கடவுளைப் பார்க்க முடியாது... அப்பாவை நாம் பார்க்கலாம்."
உங்கள் மகன் சஞ்சய்க்கு நடிப்பதில் ஆர்வம் உள்ளதா?
"சஞ்சய் என்ன நினைக்கிறான் என்று எனக்கே தெரியவில்லை. எல்லாம் அவருடைய ஆர்வம்தான். என் உதவி வேண்டும் என்று அவர் நினைத்தால் நிச்சயம் உதவுவேன். பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் சஞ்சய்க்காக ஒரு கதையை என்னிடம் கூறினார். சஞ்சய் இதனை ஒத்துக்கொள்ள வேண்டும் என நான் மிகவும் ஆசைப்பட்டேன். சஞ்சய்யிடம் கூறியபோது இப்போதைக்கு எனக்கு வேண்டாம். இரண்டு வருடங்கள் ஆகட்டும் என்று கூறினான். சஞ்சய் திரைக்கு முன்னால் இருக்கப் போகிறனா? அல்லது பின்னால் இருக்கப் போகிறானா என்று எனக்குத் தெரியவில்லை."
ரசிகர்களுக்கு நீங்கள் கூறவிருப்பது...
"என்னுடைய நண்பர்கள் (ரசிகர்கள்) அனைவரும் வேறமாரிதான். அவர்களுக்கு அறிவிரை வழங்குவதற்கு நான் பெரிய ஆளில்லை என்று கூறி தப்பிக்க விரும்பவில்லை. நாம் விமர்சனம் செய்பவர்களாக மட்டும் இருக்கக் கூடாது. உங்களது பங்களிப்பு அனைத்திலும் சிறப்பானதாக இருக்க வேண்டும். உங்களது அனைத்து வெற்றிக்கும் என் வாழ்த்துகள்."
நீங்கள் நடித்த படங்களில் தனிப்பட்ட ரீதியாக உங்களை தொடர்புப்படுத்தக் கூடிய கதாபாத்திரங்கள்...
"பூவே உனக்காக, போக்கிரி, பீஸ்ட் சொல்லலாம். ஆனால் எப்பவும் நண்பன் பட கதாபாத்திரம்தான்."
உங்களுக்கு பிடித்த உணவு , உடை...
"என்னை பொறுத்தவரை 100 ரூபாய் பிரியாணிதான். ஆடைகள் எளிமையாகவே வாங்குவேன். நான் அவ்வளவுதான்."
உங்களுடைய New year Resoultion என்ன?
"எடுப்பேன்... அடுத்த நாளே அதனை விட்டுவிடுவேன். இப்போ அதெல்லாம் செட் ஆகாது என்று புரிந்துவிட்டது."
உங்களுடைய பட தேர்வு பற்றி? திட்டமிட்டு தேர்வு செய்கிறீர்களா?
"அதெல்லாம் இல்லை. எந்த திட்டமும் நான் போடுவது இல்லை. படத்தில் எல்லாம் இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்வேன். அவ்வளவுதான்."
விஜயே, விஜயை நேர்காணல் செய்தால் என்ன கேட்பார்?
"தமிழ் சினிமா உங்களை நல்ல இடத்தில் கொண்டு வந்து வைத்துள்ளது. தமிழ் சினிமாவை அடுத்த உயரத்திற்கு கொண்டு செல்ல நீங்கள் எப்போது படம் செய்ய போகிறீர்கள்?" என்று கேட்பேன்
'தளபதி'யிலிருந்து 'தலைவன்' ஆக மாறும் எண்ணம் உள்ளதா?
என்னை ’தளபதி’யாக்கியது ரசிகர்கள்தான். என்னை ’தலைவன்’ ஆக்கவேண்டுமா இல்லையா என்பதையும் அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ரசிகர்களும், சூழலும் அதனை வலியுறுத்தினால் அதனை எதிர்கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை, நான் விஜய்யாக இருப்பதுதான் பிடித்திருக்கிறது. ரசிகர்களில் சிலர் உண்மையாகவே மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற எனது ரசிகர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை தொடர்ந்து நான் கவனித்து வருகிறோம். அவர்கள் உளமாற மக்களுக்கு பணி செய்கிறார்கள். அவர்களை நினைத்து மகிழ்ச்சிதான்."
சமூகத்தில் நடக்கும் பிற விஷயங்களை கவனிக்கிறீர்களா?
"முன்னைவிட தற்போது அதிகம் கவனிக்கிறேன். தமிழகத்தில் ஒரு சிலவற்றை தவிர்த்து எல்லாம் சிறப்பாக உள்ளது. புதுக்கோட்டையில் ராணுவத் துப்பாக்கி பயிற்சியின்போது வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது குண்டு பாய்ந்தது இறந்து போனான். இம்மாதிரியான நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும். பயிற்சித் தளங்கள் மக்கள் அதிகமாக நடமாட்ட இல்லாத இடத்தில் மாற்ற நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். கணினி வழி பயிற்சிகளையும் நடத்தலாம்."
4 கார்கள் இருக்கும்போது தேர்தலில் ஏன் சைக்கிளிலில் சென்றீர்கள்?
"நான் சாதரணமாக செய்ததுதான்... அதில் எந்த உள்நோக்கமும் இல்லை"