

அரிதாரம் அற்ற அரிதான திரைக் கலைஞர்களில் தனித்துவமும் கலை நேர்த்தியும் கொண்டவர் நாசர். 400 படங்களைக் கடந்துவிட்ட நாசர், இரண்டாம் முறையாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகத் தேர்வு பெற்று தமிழ் சினிமா கலைஞர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார். தன்னுடைய திரைப் பயணத்தின் தொடக்கத்திலேயே, கலைஞானி கமல் ஹாசனின் நம்பிக்கையைப் பெற்று ‘நாயகன்’படத்தில் கவனிக்க வைத்தவர், கமலுடைய படங்களில் தொடர்ந்து இடம் பிடித்தார்.
இன்று தன்னுடைய 64-வது வயதில் அடிவைக்கும் நாசர், குறித்து அவருடன் தரமணி திரைப்படக் கல்லூரியில் பயின்ற சக திரைக்கலைஞரான யூகி சேதுவின் திரைப்படப் படிப்புக்கான டிப்ளமோ படத்தில் தொடங்கி, அவரது எல்லாப் படங்களிலும் நாசர் இருப்பார். உயிர் நண்பரைப் பற்றி யூகி சேது இந்து தமிழ் திசை இணையத்துக்காகப் பகிர்ந்து கொண்டதிலிருந்து ஒரு பகுதி:
“எல்லோரும் படிப்பைப் படிக்கப் பள்ளிக்கூடம் சென்றால், நாசர் அதைவிட நடிப்பைப் படிக்கச் செல்லாத கல்லூரியே கிடையாது. கணையாழி, ழ, கசடதபற, புதுமைப்பித்தன், லா.சா.ரா. என்றெல்லாம் என்னதான் படித்தாலும் ந.முத்துசாமியின் கூத்துப்பட்டறையில் நடிப்பைப் பயில்வதில் அவருக்கு ஆர்வம்.
திரைப்படக் கல்லூரியில் நடிப்பைப் படித்து முடித்து வெளியே வந்த பலரில் இயக்குநர் கே.ஆர்., நாசரை மட்டும் தேர்ந்தெடுத்து முன் பணமாக உடனே ரூ.1000/-ஐ கொடுத்து புக் செய்தார். அதுதான் சினிமாவுக்காக நாசர் வாங்கிய முதல் அட்வான்ஸ். பிறகு நாசரை ‘ஈரமான ரோஜாவே’ படத்தில் அவர் நடிக்க அழைத்த தருணத்தில் நாசர் ஐம்பது படங்களைத் தாண்டியிருந்தார். ‘ஏன் நாசரை மட்டும் தேர்ந்தெடுத்தீர்கள்?’ என்று கேட்டேன்.
‘அந்த ஃபேஸ் அந்த நோஸ்’ என்றார். நடிக்கத் தொடங்கும் முன்னரே நாசருக்கு, சிறந்த நடிகரின் தோற்றம் அமைந்துவிட்டது. அந்த நாசிக்காக, நாசிக்கில் அச்சடித்த பல லட்சம் ரூபாயை சம்பாதித்த நாசரை, ‘நாசீ’ர் என்றுகூட அழைக்கலாம். மிக அமைதியான, வெகுளித்தனமான, குழந்தையைப் போல எதைக் கண்டாலும் ஆச்சரியம்,. ஆர்வம் உள்ளவராகப் பார்த்திருக்கிறேன். ஒரே நாளில், ஒரே பாய்ச்சலில் எல்லாம் பேசும் சமூக ஆர்வலராக, இலக்கியவாதியாக, மாறியதையும் பார்த்திருக்கிறேன். நேற்று வரை மாணவன், இன்று மின்னல் வேகத்தில் வாத்தியார்.
நாசரின் தந்தை செங்கல்பட்டில் எத்தனையோ பேருக்குத் தங்கத்தை அழகுபடுத்திக் கொடுத்திருக்கலாம், ஆனால் அவர் பெற்ற வைரம்தான் நாசர் எனும் மாஸ்டர் பீஸ்”.