

‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் விஜய், செல்வராகவன், பூஜா ஹெக்டே, யோகி பாபு, கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. முதலாவதாக ‘அரபிக் குத்து’ என்ற பாடல் வெளியிடப்பட்டது. அனிருத் இசையில் உருவான இந்தப் பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியிருந்தார். அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இருவரும் பாடியிருந்தார்கள். இந்தப் பாடல் வெளியான அன்று கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பின்பு அமோக வரவேற்பைப் பெற்றது.
24 மணி நேரத்தில் 25 மில்லியன் பார்வைகள், 48 மணி நேரத்தில் 35 மில்லியன், 4 நாட்களில் 50 மில்லியன், ஒரு வாரத்தில் 70 மில்லியன் பார்வைகள் எனத் தொடர்ச்சியாகச் சாதனைகள் படைத்து வந்தது. தற்போது 12 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை புரிந்துள்ளது ‘அரபிக் குத்து’ பாடல். தமிழ் சினிமாவில் குறைந்த நாட்களில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடல் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இந்தப் புதிய சாதனையால் ‘பீஸ்ட்’ படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.