Published : 25 Feb 2022 11:34 AM
Last Updated : 25 Feb 2022 11:34 AM

திரை விமர்சனம்: வலிமை

சென்னை மாநகரில் செயின் பறிப்பு, போதைப் பொருள் கடத்தல், கூலிக்கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுகிறது ‘சாத்தானின் அடிமைகள்’ என்ற பைக் சாகச ஓட்டிகளைக் கொண்ட குழு. மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒரு ‘பீப்பிள் காப்’ ஆக இருக்கும் காவல் அதிகாரியால் மட்டுமே இதை கட்டுப்படுத்தமுடியும் என்றுநம்புகிறார் மாநகரக் காவல் ஆணையர். மதுரையில் உதவி ஆணையராக இருக்கும் அர்ஜுனை(அஜித்) சென்னைக்கு வரவழைக்கிறார். அம்மா, திருமணமான அண்ணன், வேலை தேடும் தம்பி என தனது கூட்டுக் குடும்பத்துடன் சென்னைக்கு வந்து பொறுப்பேற்கிறார் அர்ஜுன். குற்றக்குழுவின் கண்ணியையும், அதன்வலைப் பின்னலையும் எப்படி கண்டுபிடித்து களையெடுக்கிறார் என்பதுதான் ‘வலிமை’.

காவல் அதிகாரி வேடம் அஜித்துக்கு புதிதல்ல. ஆனால், இதற்கு முன்பு அவர் ஏற்ற எல்லா காக்கி வேடங்களையும் ஒன்றுமில்லை என்று ஆக்கிவிட்டார் இந்த அர்ஜுன்.

இயக்குநர் ஹெச்.வினோத், ஒரு திரைக்கதை எழுத்தாளராக, அஜித் கதாபாத்திரத்தை, உடல் வலிமை, குடும்பப் பாசம், துறை மீதான மரியாதை, குற்றவாளிகளின் குடும்பங்கள் மீதான பரிவு, சமூக அக்கறை, குற்ற உலகை அணுகும்அறிவுக் கூர்மை ஆகியவற்றுடன், அவரது பைக் சாகசத் திறமையும் முழுமையாக வெளிப்படும் வண்ணம் டபுள் மாஸாக எழுதியிருக் கிறார்.

‘டார்க் நெட்’ எனப்படும் இணைய உத்தி மூலம் காவல் துறைக்கு தண்ணி காட்டும் குற்றக் குழுவின் ஐ.பி. முகவரியை, தனது சைபர் டீம் உதவியுடன் தட்டித் தூக்குவதில் தொடங்கும் அஜித்தின் ‘ஆக்‌ஷன்ரேஸ்’, முதன்மை வில்லனுடன் பைக்கில் வானில் டைவ் செய்து சாகச சண்டை செய்வது, ஒரு டன்போதைப் பொருளை, கருவூலத்தில் இருந்து வெளியே எடுப்பது என கிளைமாக்ஸ் வரை எந்த இடத்திலும் இடை நிற்கவில்லை. அஜித்தும் ஆக்‌ஷன் காட்சிகளில் கடும் உழைப்பையும், வசனக் காட்சிகளில் நிதானத்தையும் வழங்கி,தான் ஏற்ற அர்ஜுன் பாத்திரத்தை இதுவரையிலான அவருடைய ‘ஆக்‌ஷன் பெஸ்ட்’ ஆக்கி யிருக்கிறார்.

‘சாத்தான் தன்னைத் தானே கடவுளாக்கிக் கொண்ட கதை’யை சொல்லும் பிரதான வில்லன் (கார்த்திகேயா) கதாபாத்திரம், புதிதாகவும் நாயகனுக்கு தண்ணிகாட்டும் ஒன்றாகவும் இருந்தாலும், உடம்பு முழுவதும் டாட்டூ போட்டுக்கொண்டபோதும், அஜித்தின் மாஸ் முன்னால், அவ்வளவாக எடுபடாத ‘பால் டப்பா’ வில்லனாகவே தெரிகிறார்.

அஜித்தின் அம்மாவாக சுமித்ரா, அண்ணனாக அச்சுதக் குமார், தம்பியாக ராஜ் ஐயப்பா, அஜித்தின் சக ஊழியர் சோஃபியாவாக ஹூமா குரேஷி, சென்னை காவல் ஆணையராக செல்வா, மற்றொரு காவல் அதிகாரியாக ஜி.எம்.சுந்தர் என துணை கதாபாத்திரங்களில் வருபவர்கள் மனதில் பதியும்படி நடித்துள்ளனர்.

வில்லனை துரத்தும் நாயகனின் பைக் சாகச சேஸ், குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லும்போது நடக்கும் சேஸிங் சண்டை ஆகிய இரண்டும் மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளன. இதை எடிட்செய்த விதத்துக்காகவே படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டியை பாராட்டலாம். படத்தொகுப்பின் வேகம், துடிப்புக்கு தேவையான காட்சிகளை பிரம்மாண்ட சட்டகங்களில் அள்ளிக் கொடுக்கிறது நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு.

முடிந்தவரை பிழைகளின்றி திரைக்கதையை தர முயற்சிக்கும் இயக்குநர், பொறியியல் பட்டதாரிகளின் நிலை, குடும்பத்தில் ஒருவர்குடியால் சீரழியும் நிலை, களையவேண்டிய போதை மருந்து பரவல் ஆகியவை மீது அக்கறை காட்டியிருக்கிறார்.

வன்முறைகளை காட்சியாக்கும் விதத்தை மட்டுப்படுத்தியிருக்க வேண்டும். ஜிப்ரானின் இரைச்சலான பின்னணி இசை, காதை கிழிக்கிறது. இதை தாண்டி‘அஜித்துக்கும் அவரது ரசிகர்களுக்கும்’ மறக்கமுடியாத ஆக்‌ஷன் - சென்டிமென்ட் ட்ரீட்டாக முழு பலம் காட்டுகிறது இந்த ‘வலிமை’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x