

'தெறி' படம் சம்பந்தமாக திரையரங்க உரிமையாளர்கள் - தயாரிப்பாளர் சங்கம் இடையே நடைபெற்ற பிரச்சினையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டு இருக்கிறது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் செங்கல்பட்டு விநியோக ஏரியாவில் வெளியாகவில்லை. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு, திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. 'தெறி' படத்தை திரையிடாத திரையரங்குகளுக்கு எந்த ஒரு புதிய படத்தையும் வழங்குவதில்லை என்று ஒருமனதாக முடிவு செய்தார்கள்.
இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களிடையே சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில் திருப்பூர் சுப்பிரமணியன் மற்றும் அருள்பதி ஆகியோர் கலந்து கொண்டார்கள். இப்பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாட்டு எட்டப்பட்டது.
அதன்படி இனிமேல் செங்கல்பட்டு ஏரியாவில் இனி விகிதாசார அடிப்படையில் மட்டுமே படங்கள் திரையிட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்திருக்கிறது. விகிதாசார அடிப்படையில் தான் சென்னை ஏரியாவில் படங்கள் திரையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இப்பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து புதிய படங்கள் வெளியீட்டில் நிலவி வந்த சிக்கல் தீர்ந்திருக்கிறது.
உயர்மட்டக் குழு அமைப்பு
இப்பேச்சுவார்த்தையில் மூன்று அமைப்பின் நிர்வாகிகளும் கலந்து பேசி, திரைத்துறை சம்பந்தபமாக ஆக்கபூர்வமான செயல்களை வரைமுறைப்படுத்தவுடம், அரசிடம் பேசி வாங்கவேண்டிய சலுகைகளைக் கேட்டு வாங்கவும், இக்குழு சார்பாக ஒரு உயர்மட்ட கமிட்டி அமைப்பது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
அக்கமிட்டியில் திருப்பூர் சுப்பிரமணியம், தாணு, அருள்பதி, அபிரமானி ராமநாதன், பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட திரைப்பட பாதுகாப்புக் குழு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
திரைத்தொழில் சம்பந்தமாகவும், அரசிடம் பெறவேண்டிய சலுகைகள் சம்பந்தமாகவும் எந்த ஒரு முடிவு எடுப்பதாலும், இக்குழுவின் முடிவு இறுதியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஒவ்வொரு மாதம் முதல் வாரத்தில் குழுவின் கூட்டம் கூட்டப்படும். அதன்படி மே மாதம் முதல் வாரத்தில் கூட்டப்படும் கூட்டத்தில் 'வாரம் ஒரு சிறிய படம் வெளியிடுவது', 'அமைய இருக்கும் புதிய அரசிடம் மானியத் தொகையை முறையிட்டு பெறுவது', 'நடிகர் - நடிகைகளுக்கு கொடுத்திருக்கும் முன்பணம்', 'திரையரங்க நுழைவுக் கட்டணத்தை கணினிமயமாக்குவது', 'திரையரங்குகளின் உரிமம் புதுப்பித்தலை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றித்தருவது', 'ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டுவது' என 6 விஷயங்களை முதல் கூட்டத்தில் உயர்மட்டக் குழு விவாதிக்க இருக்கிறது.