

தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலுக்கு சமரச பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'தெறி', செங்கல்பட்டு ஏரியாவில் உள்ள பல திரையரங்குகளில் வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளர் தாணுவிற்கு சில கோடிகள் இழப்பு ஏற்பட்டது.
"தாணு எங்களிடம் அதிகமான முன்பணம் கேட்டதால் மட்டுமே படத்தை நாங்கள் திரையிட முடியவில்லை. செங்கல்பட்டில் வெளியாகாததற்கு தாணு மட்டுமே காரணம்" என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் குற்றச்சாட்டினார். இதனைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
'கபாலி'க்கு எழும் சிக்கல்
இந்நிலையில் திரையரங்க உரிமையாளர் சங்க பத்திரிகையாளர் சந்திப்பில் "செங்கல்பட்டு ஏரியாவில் எம்.ஜி (MG - Minimum Guarantee) அடிப்படையில் படத்தை திரையிட மாட்டோம். சதவீத அடிப்படையில் தான் திரையிடுவோம்.
'கபாலி' படத்தை தரமாட்டேன் என்று தாணு கூறுகிறார். இந்த விஷயத்தில் ரஜினி தலையிட வேண்டும். தியேட்டர் அதிபர்களுடன் பேசி, தமிழகம் முழுவதும் சதவீத அடிப்படையில் படத்தை திரையிட வழிவகை செய்ய வேண்டும். செங்கல்பட்டு ஏரியாவுக்கு 'கபாலி' தரவில்லை என்றால், தமிழகம் முழுவதும் அப்படத்தை திரையிட மாட்டோம்" என்று தெரிவித்தார் பன்னீர்செல்வம்.
நேற்றிரவு தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் செங்கல்பட்டில் 'தெறி' படத்தை திரையிட்ட திரையரங்குகளுக்கு மட்டுமே புதுப்படங்களைக் கொடுப்பது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிய படங்களின் நிலைமை என்ன?
22ம் தேதி வெளியாக இருக்கும் 'வெற்றிவேல்' படத்தை லைக்கா நிறுவனம் வெளியிட இருக்கிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட அனைத்து ஏரியாக்களிலும் அந்நிறுவனம் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்து வெளியிடுகிறது.
மேலும் ஏப்ரல் 29ம் தேதி வெளியாகும் 'மனிதன்' படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் "கடந்த 5 ஆண்டுகளாக என் படங்களுக்கு வரிச்சலுகையே கொடுப்பதில்லை. அப்போது இந்த தயாரிப்பாளர் சங்கம் எங்கே போனது? எனது படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும்" என்று தெரிவித்தார்.
சமரச பேச்சுவார்த்தை தொடக்கம்
தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கம் இருவருக்கும் இடையே பிரச்சினையை பெரிதாகியுள்ள நிலையில் சமரச பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினை சுமுகமாக முடிவுக்கு வரும் என தெரிகிறது. சமரச பேச்சுவார்த்தையில் திருப்பூர் சுப்பிரமணியம், அபிராமி ராமநாதன், அருள்பதி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.