இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி: சூர்யா வழங்கினார்

இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி: சூர்யா வழங்கினார்
Updated on
1 min read

இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார் சூர்யா.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. நாளை (அக்டோபர் 2) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பிரத்யேகக் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.

'ஜெய் பீம்' படத்தைப் பார்த்த பலரும் படக்குழுவினருக்குத் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சியிலும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்க்கை நெருக்கடிகளை இந்தப் படம் பேசியிருக்கிறது. இந்தப் படத்தை நேற்று (அக்டோபர் 31) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரத்யேகமாக திரையிட்டுக் காட்டியது படக்குழு. அவரும் படக்குழுவினருக்குத் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் முன்னிலையில் இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக, தனது தயாரிப்பு நிறுவனம் சார்பில் 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார் சூர்யா. இதன் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. சூர்யாவின் இந்த முயற்சிக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in