

புதுமுக இயக்குநர் ஹரி இயக்கி வரும் பேய் படத்தின் நாயகனாக நடித்து வருகிறார் ஜீவா.
ஜீவா நடிப்பில் 'திருநாள்' மற்றும் 'போக்கிரி ராஜா' ஆகிய படங்கள் வெளியீட்டிற்கு தயாராக இருக்கின்றன. இதில் 'போக்கிரி ராஜா' திரைப்படம் மார்ச் 4ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து 'திருநாள்' படத்தை வெளிக்கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இப்படங்களைத் தொடர்ந்து டி.கே இயக்கத்தில் 'கவலை வேண்டாம்' படத்தில் நடித்து வந்தார் ஜீவா. அப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, தற்போது புதுமுக இயக்குநர் ஹரி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஹரி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பழனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா ஆகியோர் ஜீவாவுடன் நடித்து வருகிறார்கள். விஷால் சந்திரசேகர் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் அட்லீ மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறார்கள்.