மீண்டும் 'பீஸ்ட்' படப்பிடிப்பு காட்சிகள் லீக்: படக்குழுவினர் அதிர்ச்சி

மீண்டும் 'பீஸ்ட்' படப்பிடிப்பு காட்சிகள் லீக்: படக்குழுவினர் அதிர்ச்சி
Updated on
1 min read

மீண்டும் 'பீஸ்ட்' படப்பிடிப்பு தளத்தின் காட்சிகள் மற்றும் விஜய்யின் புகைப்படங்கள் லீக் ஆனதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் பிரதான காட்சிகளுக்காகப் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் அரங்கம் அமைத்து காட்சிப்படுத்தி வருகிறது படக்குழு. இதில் விஜய் பங்கேற்று நடித்து வருகிறார். இன்று (அக்டோபர் 20) மால் படப்பிடிப்பு அரங்கின் 40 விநாடி வீடியோ காட்சிகள் மற்றும் விஜய் நிற்கும் புகைப்படம் ஆகியவை இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

இந்த லீக்கினால் 'பீஸ்ட்' படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இந்த வீடியோ மற்றும் புகைப்படத்தினை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். இதனை நிறுத்துவதற்கு சன் பிக்சர்ஸ் குழுவினர் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்புக் கூட இதே போன்று வீடியோ காட்சிகள் லீக் ஆனது குறிப்பிடத்தக்கது.

'பீஸ்ட்' படத்தில் செல்வராகவன், யோகி பாபு, பூஹா ஹெக்டே, விடிவி கணேஷ், லிலிபுட் ஃபரூக்கி, ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத், எடிட்டராக நிர்மல், கலை இயக்குநராக கிரண் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in