மீண்டும் இணைகிறது 'மாஸ்டர்' கூட்டணி

மீண்டும் இணைகிறது 'மாஸ்டர்' கூட்டணி
Updated on
1 min read

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிக்கவிருப்பது உறுதியாகிவிட்டது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவான இந்தப் படத்தின் முழு உரிமையையும் கைப்பற்றி லலித் குமார் வெளியிட்டார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

கரோனா அச்சுறுத்தலால் நீண்ட நாட்கள் கழித்து இந்தப் படம் வெளியானது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு லலித் குமார் தயாரிப்பில் இன்னொரு படம் நடிக்க விஜய் ஒப்புக் கொண்டார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், எதுவுமே உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.

தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பீஸ்ட்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். இதனைத் தொடர்ந்து வம்சி இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதனை தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இது விஜய் நடிப்பில் உருவாகும் 'தளபதி 66' படமாகும்.

இதனிடையே, 'தளபதி 67' படத்தையும் உறுதி செய்துவிட்டார் விஜய். இதில் 'மாஸ்டர்' கூட்டணி இணைகிறது. லலித் குமார் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். 'விக்ரம்' பணிகள் முடிந்தவுடன், இந்தப் படத்தின் பணிகளைத் தொடங்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். 2022-ம் ஆண்டு மத்தியில் இந்தப் படம் தொடங்கவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in