

'தெறி' படத்தின் விநியோக உரிமையை குறித்து ஐங்கரன் ட்விட்டர் பக்கத்தில் தகவலை வெளியீட்டு, பின்னர் அதை நீக்கியதால் கோலிவுட்டில் சலசலப்பு நிலவியது.
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'தெறி' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தாணு தயாரித்து வருகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளிவரும் 50வது படமாகும்.
ஏப்ரல் மாதம் இப்படத்தை வெளியிடு முனைப்பில் இறுதிகட்டப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. 'தெறி' படத்தின் விநியோக உரிமையை கைப்பற்ற பல்வேறு முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் போட்டியிட்டு வருகின்றன.
இந்நிலையில், ஐங்கரன் ட்விட்டர் பக்கத்தில் "லைக்கா நிறுவனம் 'தெறி' படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றி இருக்கிறது" என்ற தகவலை வெளியிட்டார்கள். இதனைத் தொடர்ந்து 'மீண்டும் விஜய்யோடு கைகோர்த்தது லைக்கா நிறுவனம்’ என்று செய்திகளை வெளியிட்டு வந்தார்கள்.
சிறிது நேரத்தில் ஐங்கரன் ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்ட தகவல் நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து "'தெறி' படத்தின் விநியோக உரிமை குறித்த தகவலுக்கு வருந்துகிறோம். அதிகாரப்பூர்வ தகவலுக்கு காத்திருங்கள்" என்று ட்வீட் செய்திருக்கிறார்கள்.
'தெறி' படத்தின் தயாரிப்பு தரப்பில் கேட்டபோது, "விநியோக உரிமை குறித்து பலரும் பேசி வருவது உண்மைத்தான். ஆனால், நாங்கள் யாருக்கும் இன்னும் அதிகார்பூர்வமாக விநியோக உரிமையை வழங்கவில்லை" என்று தெரிவித்தார்கள்.