

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் பெடா (PETA) விலங்குகள் நல அமைப்பின் கையெழுத்து இயக்கத்தில் இணைந்த நடிகை ஏமி ஜாக்சன், அது தொடர்பாக ட்விட்டரில் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.
பெடா விலங்குகள் நல அமைப்பு, ஜல்லிக்கட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகிறது. அந்த கையெழுத்து இயக்கத்தில் வித்யா பாலன், பிபாஷா பாசு உள்ளிட்ட நடிகர்கள், விராட் கோலி முதலான கிரிக்கெட் நட்சத்திரங்கள் கையெழுத்திட்டு தங்கள் ஆதரவைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த கையெழுத்து இயக்கத்தில், 'ஐ' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஏமி ஜாக்சனும் இணைந்துள்ளார். அத்துடன், தனது ட்விட்டர் பக்கத்தில் பெடா கையெழுத்து இயக்கத்தின் இணைப்பை வெளியிட்டு, இதற்கு ஆதரவு தர வேண்டும் என்று பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் ஏமி ஜாக்சன். இவரது நடிப்பில் 'தங்கமகன்', 'கெத்து', 'தெறி' ஆகியவை வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. ரஜினியுடன் ஏமி ஜாக்சன் நடிக்கும் '2.0' படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.