தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகும் மற்றொரு படம்

தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகும் மற்றொரு படம்
Updated on
1 min read

தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது சமுத்திரக்கனி நடித்துள்ள 'வெள்ளை யானை' திரைப்படம்.

2011-ம் ஆண்டு 'சீடன்' படத்தை இயக்கியிருந்தார் சுப்பிரமணிய சிவா. அதனைத் தொடர்ந்து மீண்டும் இயக்கத்துக்குத் திரும்பிய படம் 'வெள்ளை யானை'. மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் வினோத் குமார் தயாரித்துள்ளார்.

சமுத்திரக்கனி, ஆத்மியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் அனைத்துமே முடிவடைந்துவிட்டன. திரையரங்க வெளியீட்டுக்காக நீண்ட நாட்களாகக் காத்திருந்தது படக்குழு.

ஆனால், கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பதே தெரியாமல் உள்ளன. இதனால், இந்தப் படத்தை நேரடியாக ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சன் டிவி நிறுவனம் படக்குழுவினரிடம் பேசி, நேரடியாக தொலைக்காட்சி ஒளிபரப்புக்குக் கைப்பற்றியுள்ளது. அதற்குப் பிறகு சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

முன்னதாக இதே பாணியில் 'ஏலே' மற்றும் 'மண்டேலா' ஆகிய படங்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in