

'தெறி' படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்வைத்து இயக்குநர் அட்லி நெகிழ்ச்சியுடன் சில ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன், ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'தெறி'. தாணு தயாரித்த இந்தப் படம் 2016-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியானது. ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், எடிட்டராக ரூபன் ஆகியோர் இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்தனர்.
இந்தப் படம் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால்தான் 'மெர்சல்', 'பிகில்' என விஜய் - அட்லி கூட்டணி தொடர்ந்து பணிபுரிந்தது. 'தெறி' வெளியாகி நேற்றுடன் 5 ஆண்டுகள் முடிந்தன.
இதனால், 'தெறி' படத்தில் பணிபுரிந்த அனைவரும் தங்களுடைய நினைவுகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். 'தெறி' படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இயக்குநர் அட்லி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
" 'தெறி' வெளியாகி ஐந்து வருடங்கள். விஜய்ணா லவ் யூ. கலைப்புலி தாணுவுக்கு நன்றி. உங்கள் ஆதரவின்றி 'தெறி' சாத்தியப்பட்டிருக்காது. அந்தப் பயணத்தை ரசித்தேன், நன்றி சார். உங்கள் அர்ப்பணிப்புக்கும், ஆதரவுக்கும் நன்றி சமந்தா.
நன்றி பேபி நைனிகா. 'தெறி' படத்துக்கு மீனாவின் ஆதரவை மறக்கவே முடியாது. மகேந்திரன் அண்ணா, ஜெகதீஷ்... உங்கள் ஆதரவுக்கும் நன்றி.
'தெறி' படத்தை என்றும் மறக்க முடியாத படமாக மாற்றிய மறைந்த இயக்குநர் மகேந்திரனுக்கு நன்றி. உங்கள் இழப்பை உணர்கிறோம் சார். உங்களிடமிருந்து நிறைய கற்றேன். அழகான பாடல்கள், பின்னணி இசை, சகோதரத்துவமான ஆதரவைத் தந்த ஜி.வி.பிரகாஷுக்கு நன்றி. உனது ஆற்றல் ஆச்சரியப்படுத்தும். 'தெறி'யின் தூண்களில் ஒருவன் நீ.
அற்புதமான தயாரிப்பு வடிவமைப்புக்கு முத்துராஜுக்கு நன்றி. பாரிஸ் கார்னர் அரங்கம் அமைத்தது என்றும் விசேஷமானது. ஆண்டனி ரூபனுக்கு நன்றி. எனக்கு உன்னை விட்டால் வேறு ஆள் கிடையாது. உன்னுடனான பயணம் அற்புதமானது. 'தெறி' படத்தொகுப்பு நாட்கள் விசேஷமானவை”.
இவ்வாறு இயக்குநர் அட்லி தெரிவித்துள்ளார்