

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'டிரைவர் ஜமுனா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது தமிழில் 'பூமிகா', 'திட்டம் இரண்டு', 'துருவ நட்சத்திரம்', 'இது வேதாளம் சொல்லும் கதை' ஆகிய படங்களிலும், தெலுங்கில் 'டக் ஜெகதீஷ்' படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.
'வத்திக்குச்சி' படத்தின் இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றை 18 ரீல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'டிரைவர் ஜமுனா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கேப் (cab) டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
இந்நிலையில் இன்று (ஏப்.14) சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. கரோனா அச்சுறுத்தலால் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதன் அடிப்படையில் கரோனா விதிமுறைகளை பின்பற்றி படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
'டிரைவர் ஜமுனா' படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய், எடிட்டராக ஆர்.ராமர் பணிபுரிந்து வருகிறார்கள். கிரைம் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது.