மீண்டும் விஜய்க்கு வில்லனாகும் வித்யூத் ஜம்வால்?

மீண்டும் விஜய்க்கு வில்லனாகும் வித்யூத் ஜம்வால்?

Published on

விஜய்க்கு வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் வெறும் வதந்திதான் என்பது தெரியவந்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2012-ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் 'துப்பாக்கி'. ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன், இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் பணிபுரிந்தனர். இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் வித்யூத் ஜம்வால்.

இதற்குப் பிறகு தமிழில் சூர்யாவுடன் 'அஞ்சான்' படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு இந்தியில் மட்டுமே வித்யூத் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லன் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், பலருடைய பெயர்களை வைத்து செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் வித்யூத் ஜம்வால் பெயரும் அடங்கும்.

இந்தச் செய்தி தொடர்பாக வித்யூத் ஜம்வால் தனது ட்விட்டர் பதிவில், "நான் காத்திருக்கிறேன், காத்திருக்கவும் விரும்புகிறேன். ஆனால், இது பொய்யான செய்தி" என்று தெரிவித்துள்ளார்.

இந்த ட்வீட்டின் மூலம், 'தளபதி 65' படத்தின் வில்லன் யார் என்ற கேள்வி இன்னும் தொடர்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in