'டைகர் 3' படப்பூஜை முடிவு: மார்ச் 8 முதல் படப்பிடிப்பு தொடக்கம்

'டைகர் 3' படப்பூஜை முடிவு: மார்ச் 8 முதல் படப்பிடிப்பு தொடக்கம்
Updated on
1 min read

'டைகர்' படத்தின் பூஜையைச் சத்தமின்றி முடித்துவிட்டது படக்குழு. மார்ச் 8-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

பாலிவுட்டில் முன்னணித் தயாரிப்பு நிறுவனமாக வலம் வருகிறது யாஷ் ராஜ் நிறுவனம். இந்த ஆண்டு அந்த நிறுவனத்தின் 50-வது ஆண்டாகும். இதனை முன்னிட்டு ஷாரூக் கான் நடித்து வரும் 'பதான்', சல்மான் கான் நடிக்கவுள்ள 'டைகர் 3' உள்ளிட்ட பல பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்து வருகிறது.

இதில் ஷாரூக் கான் நடித்து வரும் 'பதான்' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் சல்மான் கான் டைகர் எனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான படப்பிடிப்பில் கலந்துகொள்ள நேற்று யாஷ் ராஜ் ஸ்டுடியோவுக்கு வந்திருந்தார்.

ஆகையால், நேற்றைய (பிப்ரவரி 27) தினமே 'டைகர் 3' படத்தின் பூஜை யாஷ் ராஜ் ஸ்டுடியோவில் நடைபெற்றது. அந்தப் படத்தின் இயக்குநர் மணிஷ் சர்மா, நாயகி கத்ரீனா கைஃப், வில்லன் இம்ரான் ஹாஸ்மி ஆகியோரும் ஸ்டுடியோவுக்கு வந்தனர். அவர்கள் அனைவருடன் 'டைகர் 3' படத்தின் பூஜை நடத்தி முடிக்கப்பட்டது.

'பதான்' படத்தில் சல்மான் கான் நடிப்பது போன்று, 'டைகர் 3' படத்தில் ஷாரூக் கான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அவரும் நேற்றைய படப்பூஜையில் கலந்து கொண்டார். மார்ச் 8-ம் தேதி முதல் மும்பையில் 'டைகர் 3' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து பல்வேறு வெளிநாடுகளில் பெரும் பொருட்செலவில் 'டைகர் 3' தயாராகவுள்ளது.

இந்திய அளவில் வெளியான படங்களைவிடப் பெரும் பொருட்செலவில் 'டைகர் 3' படத்தை உருவாக்க யாஷ் ராஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in