கமல் படப் பாடலை வித்தியாசமான முறையில் ரீமிக்ஸ் செய்த யுவன்

கமல் படப் பாடலை வித்தியாசமான முறையில் ரீமிக்ஸ் செய்த யுவன்

Published on

பாடல் வரிகள் மற்றும் குரல் ஆகியவற்றை மாற்றாமல் இசையை மட்டும் மாற்றி ரீமிக்ஸ் பாடலொன்றை உருவாக்கியுள்ளார் யுவன்.

எழுத்தாளர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகி வந்த படம் ‘டிக்கிலோனா’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ‘பலூன்’ இயக்குநர் சினிஷ் தயாரித்துள்ளார். இதில் சந்தானம் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மேலும் யோகி பாபு, அனகா, ஷிரின், ஆனந்த்ராஜ், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷா ரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, இட் ஈஸ் பிரசாந்த் உள்ளிட்ட பலர் சந்தானத்துடன் நடித்துள்ளனர். டைம் மிஷினை வைத்து உருவாகும் பிரச்சினைகளை வைத்து காமெடியாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. இந்தப் படத்துக்காக சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தின் 'பேர் வைச்சாலும் வைக்காமல்' என்ற பாடலை ரீமீக்ஸ் செய்துள்ளார் யுவன்.

இந்தப் பாடல் நாளை (பிப்ரவரி 18) மாலை வெளியாகவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தப் பாடலுக்கு இசையை மட்டுமே மாற்றியுள்ளார் யுவன். பாடலாசிரியர் வாலியின் வரிகள், மலேசிய வாசுதேவன் மற்றும் ஜானகியின் குரல் ஆகியவை அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in