

'சாம் ஹொய்' என்ற வியட்நாமியப் படத்தின் இசையமைப்பாளராக சாம் சி.எஸ் பணிபுரிந்துள்ளார்.
இந்தியத் திரையுலகில் முன்னணி சண்டைக் காட்சிகளின் இயக்குநராக வலம் வருபவர் பீட்டர் ஹெய்ன். தற்போது வியட்நாமிய (வியட்நாமீஸ்) மொழியில் புதிய படமொன்றை இயக்கியுள்ளார் பீட்டர் ஹெய்ன். இதற்கு இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார் சாம் சி.எஸ்.
'சாம் ஹொய்' படத்தில் இசையமைப்பாளராகப் பணிபுரிந்திருப்பது குறித்து சாம் சி.எஸ். கூறியிருப்பதாவது:
"மிக மகிழ்ச்சியாகவும் அதே நேரம் கொஞ்சம் பதற்றமாகவும் உள்ளது. தமிழில் கிடைத்த அதே வரவேற்பு உலக ரசிகர்களிடம் இருந்தும் கிடைக்குமென எதிர்பார்க்கிறேன். உலகத் திரைப்படத்திற்கு இசையமைக்கும் இந்த அரிய வாய்ப்பு, சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் மூலம்தான் கிடைத்தது.
இப்படத்தை அவர்தான் இயக்குகிறார். என் மேல் அவர் வைத்திருக்கும் பெரும் நம்பிக்கைக்கு, நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகப்படத்திற்கு இசையமைக்கும் அனுபவம் முற்றிலும் புதிதாக, மேஜிக்கல் தருணமாக இருந்தது.
படத்தில் தூள் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள் பாக்ஸிங் வளையத்திற்குள் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. எமோஷனல் காட்சிகளும் இப்படத்தில் உள்ளன. அவை எனது திறமையை வெளிக்கொண்டு வர நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இப்படம் வெளிவரும் முன்பே, வேறு பல உலகப் பட வாய்ப்புகளும், கொரியன் பட வாய்ப்புகளும் என்னைத் தேடி வந்துள்ளன. மகிழ்ச்சி."
இவ்வாறு சாம் சி.எஸ். தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு 'சாம் ஹொய்' படம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.