ப்ரேமம் ரீமேக்கில் விஜய்சேதுபதி?- தனுஷ் தரப்பு மறுப்பு

ப்ரேமம் ரீமேக்கில் விஜய்சேதுபதி?- தனுஷ் தரப்பு மறுப்பு
Updated on
1 min read

தனுஷ் தயாரிக்கவிருக்கும் விஜய் சேதுபதி படம் 'ப்ரேமம்' ரீமேக் அல்ல என்று தயாரிப்பு தரப்பினர் தெரிவித்தார்கள்.

ஓர் இளைஞனின் வாழ்வில் பல்வேறு கட்டங்களில் வரும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'ப்ரேமம்', மலையாளத் திரையுலகில் வசூல் சாதனை படைத்தது. அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்திருந்தார்.

மே மாதம் வெளியான இந்தப் படம், இப்போதும் சென்னையில் திரையிடப்பட்டு வருகிறது. 'ப்ரேமம்' படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் உரிமைகளைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. தெலுங்கு ரீமேக் உரிமையை எஸ். ராதா கிருஷணன் என்பவர் வாங்கியுள்ளார். தமிழ் ரீமேக் உரிமைக்கு தனுஷ் மற்றும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் போட்டியிட்டது.

இந்நிலையில், 'நானும் ரவுடிதான்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தைத் தயாரிக்க இருப்பதாக அறிவித்தார் தனுஷ். அப்படம் 'ப்ரேமம்' ரீமேக் என்றும், இயக்குநர் யார் என்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து தனுஷின் தயாரிப்பு நிறுவனத்தில் விசாரித்த போது, "விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் படம் 'ப்ரேமம்' ரீமேக் அல்ல. விஜய் சேதுபதி மட்டுமே உறுதியாகி இருக்கிறார். கதை, இயக்குநர், நாயகி உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இனிமேல் தான் முடிவு செய்யவிருக்கிறோம்" என்று தெரிவித்தார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in