கமலுடன் சந்திப்பு: ஆர்யா நெகிழ்ச்சி

கமலுடன் சந்திப்பு: ஆர்யா நெகிழ்ச்சி

Published on

கமலுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து ஆர்யா நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, கலையரசன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சார்பட்டா பரம்பரை'. கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் 2-ம் தேதி வெளியிடப்பட்டது.

போஸ்டருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பிரபலங்கள் பலரும் ஆர்யாவின் உடலமைப்பு மாற்றத்துக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நாளை (டிசம்பர் 11) ஆர்யா தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். இதனை முன்னிட்டு நேற்று (டிசம்பர் 9) கமலை அவருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது 'சார்பட்டா பரம்பரை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைக் கமலிடம் காண்பித்து, அது தொடர்பாக நீண்ட நேரம் உரையாடியுள்ளார் ஆர்யா.

கமலுடனான சந்திப்பு குறித்து ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"இதைவிடச் சிறந்த பிறந்த நாள் பரிசு கிடைக்காது. 'சார்பட்டா பரம்பரை' படத்துக்கு நீங்கள் காட்டும் அன்பினால் அதீத மகிழ்ச்சி அடைந்துள்ளேன். 'சார்பட்டா' படத்தில் எனது பணியை உங்களுக்குக் காட்டியதுதான் என் வாழ்வின் மிகச் சிறந்த நாளாக அமைந்தது. உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்ததற்குக் கோடி நன்றிகள்".

இவ்வாறு ஆர்யா தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in