

எதிர்மறையான விமர்சனங்களையும் மீறி, விஜய் நடித்த 'புலி' திரைப்படம், முதல் வாரத்தில் ரூ.71 கோடி வசூல் செய்திருக்கிறது.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப், பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'புலி'. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்த இப்படத்தை பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள்.
அக்டோபர் 1ம் தேதி வெளியான இப்படம் மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றது. மோசமான விமர்சனங்களால் படத்தின் வசூல் மிகவும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், "கலவையான விமர்சனங்களையும் மீறி முதல் வாரத்தில் 'புலி' திரைப்படம் ரூ.71 கோடி வசூல் செய்திருக்கிறது" என்று தயாரிப்பு நிறுவனத்தில் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னையில் உள்ள மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் 'புலி' படத்தின் காட்சிகள் வெகுவாக குறைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு சில திரையரங்குகளில் ஒரே வாரத்தில் தூக்கப்பட்ட முதல் விஜய் படம் என்று பெயர் எடுத்திருக்கிறது 'புலி'.