

பெண்களுக்கு சமுதாயத்தில் இருக்கும் முக்கியத்துவமே திரையிலும் பிரதிபலிக்கிறது என்று நடிகை ஊர்வசி கூறியுள்ளார்
ஆர்.ஜே. பாலாஜி, என்.ஜே.சரவணன் இருவரின் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம், தீபாவளி அன்று நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தில் ஆர்ஜே பாலாஜி கதாபாத்திரத்துக்கு அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசி தி இந்து ஆங்கிலத்துக்கு அளித்த பேட்டியில் திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறித்துப் பேசியுள்ளார்.
"பெண்களுக்கு சமூகத்தில் இருக்கும் முக்கியத்துவம் தான் திரைப்படங்களிலும் பிரதிபலிக்கும். பெண்களுக்கென ஒரு கருத்து இருக்கக் கூடாது, அவர்களின் ஒரே வாழ்க்கை லட்சியம் திருமணம் செய்து கொண்டு, குழந்தை பெற்று, கணவனைப் பார்த்துக் கொண்டு, முக்கிய விஷயங்களில் ஆண்களையே முடிவெடுக்க வைக்க வேண்டும் என்று தான் ஆணாதிக்கம் சொல்கிறது. அதனால் திரைப்படங்களிலும் ஒரு அம்மா கதாபாத்திரத்தின் குணங்கள் என்ன என்பதை நாம் பார்ப்பதில்லை.
இதற்குக் காரணம், ஒரு நாயகனைப் பற்றிய படத்தை எளிதில் வியாபாரம் செய்யலாம் என்பதே. ஏன் பெரும்பாலான குடும்ப ரசிகர்கள், பெண்கள் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கின்றனர்? இயக்குநர்கள் ஒன்றை கவனித்தால், திரையரங்குக்கு வரும் பெண்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இதற்குக் காரணம் பெரும்பாலான திரைப்படங்களில் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருப்பதில்லை என்பதே.
பெண் கதாபாத்திரங்களை வைத்துக் கதை யோசிக்க ஆரம்பித்தா இயக்குநர்களின் கற்பனைக்கு குறைவே இருக்காது. ஒரு பெண் கதாபாத்திரம் இல்லாமலேயே அந்த கதாபாத்திரம் பற்றிய படத்தை இங்கு எடுக்கலாம். ஒரு ஆண் தனது அம்மாவைத் தேடிப் போகும் போது, படம் முழுவதும் தன் அம்மாவைப் பற்றியே பேசி, சிந்தித்தால்,அந்தப் படம் அந்த அம்மாவைப் பற்றியதாகத்தானே ஆகும்?".