'தளபதி 65' அப்டேட்: இயக்குநர் நெல்சனிடம் பேச்சுவார்த்தை

'தளபதி 65' அப்டேட்: இயக்குநர் நெல்சனிடம் பேச்சுவார்த்தை
Updated on
1 min read

'தளபதி 65' படத்தை இயக்க இயக்குநர் நெல்சனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். இந்தப் படத்தை இயக்க ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்பந்தமாகி, பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இதனால் 'தளபதி 65' இயக்குநர் யார் என்பது இன்னும் தெரியாமல் உள்ளது. பல இயக்குநர்களுடைய பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் இருந்த பாண்டிராஜ், கார்த்திக் சுப்புராஜ், மகிழ் திருமேனி உள்ளிட்ட சிலர் தங்களுடைய அடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், 'தளபதி 65' இயக்குநர் பட்டியலில் புதிதாக இணைந்திருப்பவர் நெல்சன். இவர் கூறிய கதை விஜய்க்கும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் பிடித்திருக்கிறது. ஆகையால், விஜய் - நெல்சன் திலீப்குமார் கூட்டணி இணைய வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது.

தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் 'டாக்டர்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கிறார் நெல்சன். அதை முடித்துக் கொடுத்துவிட்டு 'தளபதி 65' பணிகளை நெல்சன் கவனிப்பார் எனத் தெரிகிறது. தீபாவளி முடிந்தவுடன் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என விஜய்க்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in