பா.இரஞ்சித்துக்கு நன்றி தெரிவித்துள்ள ஆர்யா

பா.இரஞ்சித்துக்கு நன்றி தெரிவித்துள்ள ஆர்யா
Updated on
1 min read

தனது காட்சிகள் அனைத்தும் முடிவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஆர்யா.

பா.இரஞ்சித் இயக்கவிருந்த இந்திப் படம் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆர்யா நாயகனாக நடிக்கும் படமொன்றை இயக்கி வந்தார். வடசென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்திய இந்தக் கதையில் நடிக்க ஆர்யா தனது உடலமைப்பை முழுமையாக மாற்றினார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பதிவில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கப் பாராட்டுகள் குவிந்து வந்தன.

தற்போது ஆர்யாவின் காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்துவிட்டார் பா.இரஞ்சித். இது தொடர்பாக ஆர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்த அற்புதமான திரைப்படத்துக்கு நன்றி ரஞ்சித் சார். இதை விட சிறந்த விளையாட்டு பற்றிய படத்தில் நான் நடித்திருக்க முடியாது. உங்களை விட யாரும் வேகமாக இருக்க முடியாது முரளி சார், ஆச்சரியப்படுத்திவிட்டீர்கள். காட்சிகள் மூலம் விருந்து வைத்ததற்கு நன்றி. எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டார்.

என் தயாரிப்பாளர் கே 9 ஸ்டுடியோஸ் நீங்கள் இல்லாமல் இந்தப் படத்தைக் கற்பனை கூடச் செய்து பார்த்திருக்க முடியாது. கனவை நனவாக்கியது நீங்கள் தான். நடிகர்கள் கலை, பசுபதி, சந்தோஷ், ஜான் விஜய் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்தனர். நிறைய கற்றுக் கொண்டேன். முதல் பார்வை மிக விரைவில்"

இவ்வாறு ஆர்யா தெரிவித்துள்ளார்.

'சல்பேட்டா' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழுவினர் இன்னும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. இதில் ஆர்யாவுடன் கலையரசன், தினேஷ், துஷாரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in